திருக்கோவிலூர் அருகே போலீசார் தாக்கியதால் முதியவர் சாவு: மருத்துவமனை முற்றுகை- பரபரப்பு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே போலீசார் தாக்கியதால் முதியவர் பலியானார். ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சூ.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன் (60). இவர் கடகால் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் கடை நடத்தி வந்தார். கடையில் மது அருந்துவதற்கு தேவையான சைட்டிஷ் பொருட்கள் வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரகண்டநல்லூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் அனுமதியின்றி பார் நடத்தக்கூடாது என்று எச்சரித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை கண்டாச்சிபுரம் பகுதியில் இருந்து அரகண்டநல்லூர் செல்லும் சாலை வழியாக பயிற்சி டிஎஸ்பி நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடையில் உலகநாதன் சைட்டிஷ் விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து அங்கு இருந்த காவலர்கள் உலகநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் போலீசார், உறவினர்கள் அவரை மீட்டு திருக்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

Related Stories: