மாத வாடகைக்கு எடுத்த கார்களை உரிமையாளர்களுக்கு தெரியாமல் அடகுவைத்து பல லட்சம் மோசடி: மேலாளர் அதிரடி கைது; 12 கார்கள் பறிமுதல்

சென்னை: மாத வாடகைக்கு கார்களை பெற்று, அதை உரிமையாளர்களுக்கு தெரியாமல் அடகுவைத்து பல லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி ஜிபிஎஸ் கருவிகள் உதவியுடன் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை போரூர் காமராஜர்புரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அப்பாவு (62). இவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் இயங்கி வரும் தனியார் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வரும் அருண் என்பவரிடம் கடந்த 12.9.2021 அன்று எனது காரை ரூ.20 ஆயிரம் மாத வாடகைக்கு விட்டேன். அதன்படி அருண் ஒரு மாதத்திற்கான வாடகை கொடுத்தார். அதன்பிறகு காருக்கான மாத வாடகையை கொடுக்கவில்லை.

இதுகுறித்து, கேட்டபோது அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார். எனவே அருணிடம் இருந்து எனது காரை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி, போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அருண் (எ) அருண்குமார் அப்பாவு போன்று 21 பேரிடம் கார்களை வாடகைக்கு பெற்று ஒரு மாதம் மட்டும் வாடகை செலுத்திவிட்டு பின்னர் அந்த வாடகைக்கு பெற்ற கார்களை பல்வேறு மாவட்டங்களில் அடமானம் வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், அருண் நொளம்பூர் பகுதியில் கார்களை வாடகைக்கு வாங்கி இயக்கி வரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருந்த போது, இதுபோன்று கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த வழக்கில் கடந்த 25.10.2021 அன்று நொளம்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்த அருணை நுங்கம்பாக்கம் போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மாத வாடகைக்கு எடுக்கும் கார்களின் ஜெராக்ஸ் ஆர்.சி. புத்தகங்கள் மூலம் அடகு வைத்து ஒரு காருக்கு ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அருண் கொடுத்த தகவலின்படி ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட 2 கார்களை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து போலீசார் மீட்டனர். மேலும், இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் 7 கார்கள், திருநெல்வேலியில் 2 கார்கள், சிவங்கையில் ஒரு கார் என மொத்தம் 12 கார்களை அடமானம் பெற்ற நபர்களிடம் இருந்து போலீசார் மீட்டனர். இதுபோல் அடமானம் வைக்கப்பட்ட கார்களை போலீசார் தொடர்ந்து மீட்டு வருகின்றனர்.

Related Stories: