×

புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் 30 ஏரிகளின் உபரி நீரை அடையாற்றில் திருப்பி விடும் பணி ஜனவரியில் தொடக்கம்: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: மழைக்காலங்களில் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், 30 ஏரிகளின் உபரி நீரை அடையாற்றில் திருப்பி விடும் பணிகளை ஜனவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1,081 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அடையாறு உபகோட்டம் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மேல் நீர்பிடிப்பு பகுதியில் ஒரு பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த அடையாறு ஆதனூரில் தொடங்கி 41.5 கி.மீ பயணித்து இறுதியாக கடலில் கலக்கிறது.

இந்த அடையாற்றில் தான் 198 ஏரிகளின் உபரி நீர் வெளிஙயேற்றப்படுகிறது. அதிலும், ஆதனூர், மண்ணிவாக்கம், ஒரத்தூர், மணிமங்கலம், மலைப்பட்டு, சோமங்கலம், செம்பரம்பாக்கம், நந்திவரம், பிள்ளைபாக்கம் உள்ளிட்ட ஏரிகள் மிகவும் முக்கியமானவை. இந்த அடையாற்றில் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மழைக்காலங்களில் அதிக அளவிலான உபரி நீர் செல்கிறது. இதில், 40 சதவீதம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தான் வருகிறது. கடந்த 2015ல் அதிகபட்சமாக 2100 மி.மீ மழை பதிவாகிய நிலையில், அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 4 முதல் 15 அடி உயரம் வரை தாண்டி சென்றது.

இந்த வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், லட்சக்கணக்கானோர் உடமைகளை இழந்தனர். இதனால், பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதேபோல், கடந்த 2020ல் பெய்த மழை காரணமாக வண்டலூர் - வாலாஜாபாத் சாலை, மணிமங்கலம், வெளிவட்ட சாலை, தர்க்காஸ் சாலை மற்றும் திருநீர்மலை சாலைகளில்  4 அடி முதல் 9 அடி வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், வரதாஜபுரம் பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இது போன்று ஒவ்வொரு ஆண்டும் புறநகர் பகுதி மக்கள் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் அடையாற்றில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க மாற்று ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சோமங்கலம், மலைப்பட்டு, மணிமங்கள் உட்பட 30 ஏரிகள் வரதராஜபுரம் அருகே ராயப்பா நகரில் இணைகிறது. அதற்கு பதிலாக 30 ஏரிகளின் உபரி நீர் வடிகால்கள் வழியாக 380 மீட்டர் திருப்பி விடப்பட உள்ளது. சோமங்கலம் துணை நதியில் இருந்து வெளியேறும் உபரி  நீர் செல்ல,  வெளிவட்ட சாலை வழியாக மூடப்பட்ட வடிகால்கள் அமைக்கப்படுகிறது. மேலும், அந்த பகுதிகளில் அடையாறு 2 மீட்டர் வரை ஆழப்படுத்தப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு ரூ.70.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிவடைந்தவுடன் ஜனவரியில் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Adyar , Diversion of surplus water from 30 lakes to Adyar to prevent flooding in suburbs begins in January: Water Resources Officer
× RELATED தனியாக வசிக்கும் வங்கி அதிகாரி...