இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கின் தொடர்ச்சி; நடிகைகள் லீனா, ஜாக்குலின், நோரா பெற்ற காதல் பரிசுகள் என்ன?.. அமலாக்கத்துறையின் 7,000 பக்க குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்

புதுடெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர், அவரது காதலிகள் லீனா மரியாபால், நோரா ஃபதேஹி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு வழங்கிய பரிசுகள் உள்ளிட்ட விபரங்களை 7000 பக்க குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அதிமுக பிளவுப்பட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் போலீசார் டிடிவி தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், பெங்களூருவை சேர்ந்த தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர்.

இவ்வழக்கு பணம் மோசடி விவகாரத்துடன் தொடர்புடையது என்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தலையிட்டு தரகர் சுகேஷ் சந்திரசேகரின் பெங்களூரு, சென்னை பங்களாக்களில் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருடைய பங்களாவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கிடையில், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் அவரது காதலி லீனா மரியாபாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். அவருக்கு காதல் பரிசாக பல கோடி மதிப்புள்ள பெருட்களை சுகேஷ் வழங்கியுள்ளார். மேலும் இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டாதால், அவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. காரணம், ஜாக்குலின் பெர்னாண்டசிம் சுகேஷும் காதலித்து வந்ததாக சுகேஷின் வழக்கறிஞர் சமீபத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்ததார். ஆனால், இதனை  ஜாக்குலின் பெர்னாண்டஸின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மறுத்தார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் முத்தம் கொடுக்கும் புகைப்படம், படுக்கையறை முத்தக் காட்சி படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ரூ200 கோடி பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், அவரது காதலி லீனா மரியாபால் மற்றும் ஆறு பேர் மீது 7,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், தனது மற்றொரு காதலியான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ52 லட்சம் மதிப்புள்ள குதிரையையும், ரூ9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையையும் பரிசாக அளித்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார். அவரது இந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு நடிகை நோரா ஃபதேஹியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் அவருக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை சுகேஷ் சந்திரசேகர் பரிசாக கொடுத்துள்ளார். தனக்கும் பணமோசடி வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நோரா ஃபதேஹி கூறிய நிலையில், அவரது பெயர் சாட்சியாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

எங்களது தரப்பு சாட்சியாக இருப்பதால், விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை அளித்து வருகிறார். பணமோசடி விவகாரத்தில் அவருக்கு எவ்வித நேரடி தொடர்பு இல்லை என்பதை உறுதிசெய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்ட  சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்ற குற்றவாளிகளுடன் நோரா ஃபதேஹிக்கு எவ்வித நேரடி தொடர்பும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

லஞ்ச புகாரில் சிறை அதிகாரிகள் கைது

ரெலிகேர் நிதி நிறுவனத்தை சேர்ந்த அதிதி சிங் என்பவரிடம் ரூ200 கோடி பண மோசடி செய்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகர் ெடல்லியின் திகார் சிறையில் உள்ளார். அவர், சிறையில் இருந்து கொண்டே அதிகாரிகளை தனது ‘கையில்’போட்டுக் கொண்டு ‘கிரேஸி கால்’எனப்படும் ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்  மூலமாக பணமோசடி செய்துள்ளார். உயர் பதவியில் இருக்கும் அரசாங்க அதிகரிகள் போல நடித்து  பலரிடமிருந்து பணம் பறித்துள்ளார். அவரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பை  ஏற்றுக் கொள்ளும் பயனாளிகளுக்கு, மொபைல் போனில் உயர் அதிகாரிகள் பேசுவது  போன்ற  விபரம் காண்பிக்கப்படும், அவர்களும் ஏமாந்து போய் பல கோடி ரூபாய் பணத்தை பறிகொடுத்துள்ளனர்.

இதற்காக சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து டெல்லி போலீசார் ரூ.20 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர். இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் டெல்லி போலீசார் ஐந்து பேர் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள் சுனில் குமார் மற்றும் சுரிந்தர் சந்திர போரா ஆகியோர் திகார் சிறை சூப்பிரண்டுகளாகவும், மகேந்திரா மற்றும் லக்‌ஷ்மி தத்தா ஆகியோர் துணை-சூப்பிரண்டுகளாகவும், பிரகாஷ் சந்த் உதவி சூப்பிரண்டாகவும் பணியாற்றி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் ரோகிணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  முன்னதாக 2 சிறை அதிகாரிகள் இதேபோல பணம் பறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 5 சிறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட வழக்கையும் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: