×

ஜெயலலிதா நினைவிடத்தில் தள்ளுமுள்ளு; ஓபிஎஸ்-எடப்பாடி காரை வழிமறித்து சசிகலா ஆதரவாளர்கள் தகராறு: மெரினாவில் பரபரப்பு

சென்னை: ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி மரியாதை செலுத்தினர். அப்போது, அவர்களது காரை சசிகலா ஆதரவாளர்கள் வழிமறித்து எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் மெரினாவில் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை அதிமுக,  அமமுக தொண்டர்கள்  மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அந்தவகையில், மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான அதிமுகவினர், அமமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் இன்று காலை முதலே குவிந்த வண்ணம் இருந்தனர். காலை 10.15 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மற்றும் எம்.எல்.ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் அவர்களது காரில் புறப்பட்டு செல்லும் போது காமராஜர் சாலை அண்ணா சதுக்கம் காவல் நிலையம் சந்திப்பு அருகே இருவரது வாகனத்தையும் டிடிவி.தினகரன் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் வழிமறித்து இருவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

இதைப்பார்த்த அதிமுக தொண்டர்கள் உடனே அங்கு வந்து அமமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடமாக இருவரது காரையும் வழிமறித்து ‘டிடிவி.தினகரன் வாழ்க.. சசிகலா வாழ்க’ என்று கோஷமிட்டனர்.
பின்னர், காவல்துறையினர் அங்கே வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து காரை அனுப்பி வைத்தனர். இதனால், காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் காலை 11.45 மணியளவில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். அப்போது 300க்கும் மேற்பட்ட அமமுக தொண்டர்கள் திரண்டு அமமுக கொடியை பிடித்து வரவேற்பு அளித்தனர். அப்போது, பல அமமுக தொண்டர்கள் சசிகலாவின் புகைப்படம் அடங்கிய பதாகைகளை பிடித்திந்தனர்.

அதிமுக தொண்டருக்கு அடி, உதை
ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோரை அமமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் வழிமறித்து கோஷமிட்டபோது, ராயப்பேட்டையை சேர்ந்த சுதாகர் என்ற அதிமுக தொண்டர் டிடிவி.தினகரன் ஒழிக என்று கோஷமிட்டார். இதைப்பார்த்த அங்கிருந்த அமமுக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் சுதாகரை சூழ்ந்துகொண்டு அடித்து, உதைத்தனர். இதில், அவருக்கு கை, கால்களில்  காயம் ஏற்பட்டது. பின்னர், போலீசார் சுதாகரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

இபிஎஸ் கார் மீது செருப்பு வீச்சு
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் காரை சசிகலா ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த போலீசார் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைக்க முயற்சி செய்தனர். அந்த சமயத்தில், எடப்பாடி பழனிசாமியின் கார் முன் நின்றிருந்த ஒருவர் தனது கையில் வைத்திருந்த செருப்பை எடப்பாடியின் காரை நோக்கி வீசினார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அந்த நபரை அப்புறப்படுத்தி இபிஎஸ் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். கார் மீது செருப்பு வீசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Jayalalitha ,OPS ,Epigad ,Sasila ,Marina , Push at Jayalalithaa memorial; Sasikala supporters quarrel over OBS-Edappadi car: Tension in Marina
× RELATED சொல்லிட்டாங்க…