திருவெறும்பூர் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் கலைநிகழ்ச்சியுடன் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம்

திருவெறும்பூர்: திருவெறும்பூர் பகுதியில் ரயில்வே இருப்பு பாதை பொன்மலை ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தப்பாட்ட கலைநிகழ்ச்சியுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கியதோடு அறிவுரையும் வழங்கப்பட்டது. திருச்சி கோட்டம் பொன்மலை ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் சப் இன்ஸ்பெக்டர் சரவண குமார் தலைமையில் திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரேசபுரம் ரயில்வே கேட் முன் தப்பாட்ட கலை நிகழ்சியோடு பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் பேசுகையில் ரயில் செல்லும் இருப்புப் பாதையில் தடையை ஏற்படுத்தும் வண்ணம் ரயில்வே இரும்பு பாதையில் கல் மற்றும் இரும்பு உள்ளிட்ட தடையான பொருட்களை வைக்கக்கூடாது. ரயில் மேல் கல் எறிந்து தாக்குவதோ ரயில் பயணிகளை தாக்குவதோ கூடாது. மேலும் ரயில்வே பாதையில் பொது மக்கள் கட்டுப்பாடில்லாமல் தங்களது மாடுகளை அவிழ்த்து விட கூடாது. அப்படி அவிழ்த்து விடுவதால் அந்த வழியாக வரும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் மாடு ஆடுகள் அடிபட்டு உயிர் இழப்பதுடன் மாடுகளின் கொம்புகள் ரயில் சக்கரத்தில் சிக்கினால் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகும். மேலும் ரயில் போக்குவரத்து பயணம் தடைபடுவதுடன் ரயில் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுகிறது.

இந்த பகுதியில் ஏராளமான மாடுகள் அடிப்பட்டு உயிரிழந்துள்ளது. இது போன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இது சட்டப்படி குற்றம். இது சம்பந்தமாக ஒரு வருடம் தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டம் உள்ளது. அதனால் பொதுமக்கள் பொறுப்புடன் மாடுகளை மேய்க்க வேண்டும் என்று கூறினார். இதில் ரயில்வே பாதுகாப்பு படை கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More