திருப்பத்தூர் மாவட்டத்தில் 13வது சிறப்பு முகாம்; ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும்; ஆய்வு செய்த கலெக்டர் பேச்சு

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த 13வது சிறப்பு முகாமை ஆய்வு செய்த கலெக்டர் அமர் குஷ்வாஹா ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் சிறப்பு முகாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி நடைபெறுகிறது. விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தொடர்ந்து நடைபெறும் சிறப்பு முகாமானது நேற்று 13வதாக அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் 13வது சிறப்பு முகாம் நேற்று நடந்தது. நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட கல்நார்சாம்பட்டி, ஜெயபுரம், பையனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் நடந்த தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடமும் எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், எவ்வளவு தடுப்பூசி இருப்பு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர், அவர் பேசியதாவது: மருத்துவ குழுவினர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அவசியத்தையும், அதன் நன்மைகளையும் பொதுமக்கள் அறியும்படி அறிவுரை வழங்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களிடம் உங்கள் ஊராட்சிக்கு குறைந்தபட்சம் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச இலக்கை ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடமாடும் முகாம்கள் மூலமாக தடுப்பூசி பொதுமக்களுக்கு வீடு,வீடாக சென்று செலுத்தப்படுகிறது. இந்த முகாம்களின் மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இதையடுத்து, நாட்றம்பள்ளி அடுத்த ஜெயபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கரும்பலகையில் எழுதியிருந்த பாடத்தை  கலெக்டர் மாணவர்களுக்கு படித்து காட்டினார். மாணவர்களை பள்ளிப்பருவத்தில் அனைவரும் நன்றாக படித்து பெரிய பொறுப்பிற்கு வர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.  ஆய்வின்போது, நாட்றம்பள்ளி தாசில்தார் பூங்கொடி, விஏஓ அனுமந்தன், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதேபோல், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர், மங்கலம், அத்தனாவூர், பள்ளகணியூர், மேட்டுகணியூர் தாயலூர் உள்ளிட்ட 14 கிராமங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ வேலன் வீடு,வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தினார்.

ஆலங்காயம்:  ஆலங்காயத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் வீடு,வீடாகச்சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். பூங்குளம் ஊராட்சியில் நடந்த முகாமை வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆய்வு செய்தார். மேலும், சுகாதாரத் துறையினர் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்கு வெள்ளநீர் சென்றுகொண்டிருக்கும் பாம்பாற்றின் தரைப்பாலம் வழியாக நடந்து சென்று தடுப்பூசி செலுத்தினர்.  அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி தினகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதன் அவசியம் குறித்து, அந்தந்த ஒன்றியங்களில் ஒன்றிய கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். அதன்படி, வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் நேற்று 13வது கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யா சதீஷ் கலந்து கொண்டு, தடுப்பூசி போட்டு கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், ஒன்றிய கவுன்சிலர் ஜனனி மோகன்ராஜ், பெத்தகல்லுபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மங்கம்மாள் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் தூய்மை பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Related Stories: