தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறையில் பெண் சிசு கொடூர கொலை

தஞ்சை: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறையில் பெண் சிசு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் வெஸ்டர்ன் டைப் கழிவறை உள்ளது. இந்த கழிவறைக்கு வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் நேற்று மதியம் சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போது கழிவறையில் தண்ணீர் வராததால் கழிவறையுடன் இணைப்பில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர்.

அந்த தொட்டிக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு உடல் தொப்புள் கொடியுடன் கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் டாக்டர்களுக்கும், மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் பெண் சிசு உடலை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு உள்ள நிலையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இந்த பெண் சிசு எப்படி வந்தது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், முதியவருடன் சேர்ந்து பெண் ஒருவர் சிசுவை தூக்கி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. சிசுவை தூக்கி சென்ற இருவரும் கழிவறை தொட்டிக்குள் இருந்த தண்ணீரில் சிசுவை அமுக்கி கொன்று அங்கேயே போட்டு விட்டு சென்றார்களா என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

Related Stories:

More