×

போரூர், மாங்காடு, ஐயப்பன்தாங்கல், தனலட்சுமி நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

சென்னை: கன மழையால் பாதிக்கப்பட்ட போரூர், மாங்காடு, ஐயப்பன்தாங்கல், தனலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். கடந்த அக்டோபர் 25 முதல் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

முதல்வர் மு.க.ஸ்டாலின், நவம்பர் 7ம் தேதி தொடங்கி இதுநாள் வரை தொடர்ந்து இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று வெள்ள சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். அதன்படி, பணிகள் நடந்து வருவதையும் ஆய்வு செய்து வருகிறார்.

தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முதல் அனைத்துத் துறை செயலாளர்கள், அலுவலர்கள், முன்களப் பணியாளர்கள் என அனைவரும் களத்தில் நின்று பணியாற்றி வருவதாலும், பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி வருவதாலும் வெள்ளப் பாதிப்புகள் துரிதமாக சீர்செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று கனமழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல், போரூர் ஏரி கலங்கல் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, மவுலிவாக்கம், மாங்காடு சுரங்கப்பாதை பகுதியில் போரூர் ஏரியின் உபரிநீர் வாய்க்காலில் கனமழையால் ஏற்பட்ட மழைவெள்ள நீர்வரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், ஐயப்பன்தாங்கல், பரணிபுத்தூர் சாலைப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, பொதுமக்களிடம் பாதிப்புகளின் விவரங்கள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார். இறுதியாக தனலட்சுமி நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட குடியிருப்புப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்பி., டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எல்.சுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Borur ,Mango ,Thanalakmi ,Q. Stalin , Porur, Mankadu, Ayyappanthangal, Chief Minister MK Stalin, relief aid
× RELATED போரூரில் பரபரப்பு; பாத்திரத்தில் தலை...