×

தர்மபுரியில் மாற்றுக்கட்சியினர் 2 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி: திமுகவினர் உறுதி எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 99 அல்ல, நூறு சதவிகிதம் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு திமுகவினர் எல்லாம் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஏற்பாட்டில், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் நேற்று இணைந்தனர். அப்போது அவர் பேசியதாவது:

தர்மபுரி மாவட்டம் “வீக் வீக்” என்பார்கள். இனிமேல் தர்மபுரி மாவட்டத்தை யாரும் வீக் என்று சொல்லக்கூடாது. இனிமேல் யாரும் அவ்வாறு சொல்லவும் மாட்டார்கள். அவ்வாறு சொல்லவும் முடியாது. ஏனென்றால் இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. எனவே அந்த மாறி இருக்கும் நிலைமையை நீங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சித் தேர்தல், அதற்கு முன்பு நடந்த அந்த 9 மாவட்டம் தவிர்த்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக ஏறக்குறைய 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் இடங்களில் வெற்றி பெற்றோம்.

9 மாவட்டங்களில் அந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அண்மையில் நடந்த அந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 99 சதவிகித இடங்களில் மிகப்பெரிய வெற்றியை  பெற்றோம். அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 99 அல்ல நூறு சதவிகிதம் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு நீங்கள் எல்லாம் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். நிச்சயமாக எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.

ஏனென்றால், கடந்த 15, 20 நாட்களாக கடுமையான மழை, வெள்ளம் இதனை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் எங்கு மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ, எங்கு தண்ணீர் சூழ்ந்து இருக்கிறதோ, எங்கு வெள்ளம் இருக்கிறதோ, எங்கு மக்களுக்கு அதிக இடையூறுகள் ஏற்பட்டிருக்கிறதோ, அந்தப் பகுதிகளுக்கெல்லாம், அந்த மாவட்டத்திற்கு எல்லாம் நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன்.

அவ்வாறு செல்லும் இடங்களில் எல்லாம் மழைத் தண்ணீர் வீடுகளைச் சூழ்ந்திருக்கிறது. அவ்வாறு சூழ்ந்திருக்கும் வீடுகளில் குடியிருப்பவர்கள் வெளியில் வந்து, அந்த மழையில், முழங்கால் தண்ணீரில் நின்றுகொண்டு எங்களைப் பார்த்து, எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களை பார்த்துதான் குறை சொல்வார்கள். ஆனால் இதுவரை நான் சுற்றி வந்திருக்கும் எந்த இடங்களிலும் ஒருகுறை கூட சொல்லவில்லை. நீங்கள் வந்துவிட்டீர்கள். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் செய்து கொடுப்பீர்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதைத்தான் நான் கேட்டேன். நான் மட்டுமல்ல எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், என, கட்சி முன்னோடிகள், யாராக இருந்தாலும் இன்றைக்கு ஒவ்வொரு பகுதிகளாக செல்லும்போதும் இதே நிலைதான்.

அதற்கு என்ன காரணம் என்றால் 6 மாத காலத்திற்குள்ளாக, 6 வருடம் இருந்து என்ன செய்ய முடியுமோ அத்தனை காரியங்களையும் நம்முடைய கழக ஆட்சி செய்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக தாய்மார்கள் மிகவும் ஆர்வத்தோடு, இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் தண்ணீரில் இறங்கி நடந்து செல்கிறபோது, சில தாய்மார்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘‘ஏன்பா இவ்வளவு கஷ்டப்படுகிறாய். இந்த தண்ணீரில் நீ நடந்து வரவேண்டுமா?. ஜாக்கிரதையாக இரு. நீ நன்றாக இருந்தால்தான் நாங்கள் நன்றாக இருக்கமுடியும்” என்று சொல்லும் நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இதை எல்லாம் நான் ஏதோ இட்டுக்கட்டிப் பேசுகிறேன் என்று நினைத்துவிட வேண்டாம்.

உண்மையாக, சத்தியமாக அண்ணா மீது ஆணையாக இதுதான் இன்றைய நிலை. எனவே அப்படிப்பட்ட நிலையில்தான் நாம் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். எனவே அதில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிச்சயமாக இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி நமக்கு கிடைக்கப் போகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களை பார்த்துதான் குறை சொல்வார்கள். ஆனால் இதுவரை நான் சுற்றி வந்திருக்கும் எந்த இடங்களிலும் ஒருகுறை கூட சொல்லவில்லை.



Tags : Dharmapuri ,Dimuka ,BC ,Q. ,Stalin , Dharmapuri, Alternative Party, DMK, Urban Local Government Election, Chief Minister MK Stalin
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்