×

வெளிநாடுகளில் அதிகாரிகள் செல்போன் ஒட்டு கேட்பு அமெரிக்காவிலும் ஊடுருவியது பெகாசஸ் உளவு மென்பொருள்: விசாரணைக்கு உத்தரவு

வாஷிங்டன்: பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி அமெரிக்க வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் 11 பேரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள், இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு ஒட்டு கேட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்னையால் கடந்த ஆகஸ்டில் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  முழுவதும் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது.

இந்நிலையில், பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி உகாண்டாவில் பணியாற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை உயரதிகாரிகள், வெளிநாட்டு சேவை பணியில் உள்ள அதிகாரிகள் உள்பட 11 பேரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. என்எஸ்ஓ நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்திருப்பதாக தகவல் வெளியான ஒரு மாதத்தில், அதன் வெளியுறவுத் துறை அதிகாரிகளின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இது பற்றி விசாரணை நடத்த  அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

வாங்கியது யார்?
என்எஸ்ஓ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், `அமெரிக்கா குறிப்பிடும் வாடிக்கையாளருடனான ஒப்பந்தம் தற்போது செயல்பாட்டில் இல்லை. அமெரிக்காவில் செல்போன்களை ஒட்டு கேட்கும் தொழில்நுட்பத்தை என்எஸ்ஓ நிறுவனம் தடை செய்துள்ளது. உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே உளவு மென்பொருள் விற்கப்படுகிறது,’ என்று கூறியுள்ளது. ஆனால், அமெரிக்காவில் இந்த உளவு மென்பொருளை வாங்கியது யார் என்பதை என்எஸ்ஓ கூற மறுத்துள்ளது.

Tags : US , Overseas, official, cell phone tapping, USA, Pegasus spy software, investigation
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...