வெங்கடாசலம் சாவில் மர்மம் இருப்பதாக யாரும் புகார் கூறவில்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் எந்தவித துன்புறுத்தலும் தரவில்லை: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: வெங்கடாசலத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் எந்தவித துன்புறுத்தலும்   தரவில்லை என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.  சென்னை மாநகர போலீஸ்  கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று அளித்த பேட்டி:

முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கில் சந்தேகங்கள் இருப்பதாக நிறைய பேர் கேள்வி எழுப்புகின்றனர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் விசாரணையில் ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால்  அதுபற்றி விளக்கமாக சொல்கிறோம். தற்போது வெங்கடாசலத்தின் பிரேத பரிசோதனை  முடிக்கப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர் பயன்படுத்திய செல்போன், டேப் ஆகியவற்றை பறிமுதல் செய்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதன் அறிக்கை வந்தவுடன் அதுபற்றிய  விவரங்கள் தெரிவிக்கப்படும். பிரேத பரிசோதனை செய்த போது எந்தவித சந்தேகங்களும் சொல்லப்படவில்லை, எனினும் இறுதி அறிக்கை வர  வேண்டி உள்ளது. வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு விசாரணை  நிலுவையில் இருக்கிறது. அவரது மனைவி கொடுத்த புகாரில் அவரது சாவில் எந்தவித  சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளையும் குறிப்பிடவில்லை. பொதுவாக நாங்கள்  நடத்திய முதற்கட்ட விசாரணையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அவருக்கு எந்தவித துன்புறுத்தலும் தரவில்லை. வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி அவரிடம்  எப்போது விசாரணைக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று மட்டும் போனில் கேட்டிருக்கிறார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார்  துன்புறுத்தல் தான் காரணம் என்று கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இது மாதிரி புகாரும் வரவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன்  அடுத்தக்கட்ட விசாரணை செய்து தகவல் தெரிவிக்கப்படும். சாவில்  மர்மம் இருப்பதாக அவருடைய மனைவி, உறவினர்கள் யாரும் புகார் கூறவில்லை.  எனினும் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. சமீபத்தில் மரணமடைந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி நல்லம்ம நாயுடு வீட்டில் கொள்ளை போய் உள்ளது.  அப்பகுதியில் தேங்கிய மழைநீரால் தினமும் பீட் போகும் போலீசாரால் செல்ல முடியவில்லை.

வைர கம்மல், 7 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை போய்  உள்ளதாக புகாரில் கூறியுள்ளனர். விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பிரச்னை தொடர்பாக புகார்கள் வந்தால்  வழக்கு பதியப்படும். நேற்று முன்தினம் ஒருவர் அளித்த புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.

Related Stories: