நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சென்னை மாநகர சாலை செப்பனிடும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை:நவீன தொழில்நுட்பத்துடன் சென்னை மாநகரம் முழுவதும் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிடும் பணிகளை விரைந்து  முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதம் 6ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

குறிப்பாக, சென்னையில் சாலைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, முதற்கட்ட நடவடிக்கையாக சென்னையில் உள்ள மழை வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு மழை நீர் அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட சென்னை மாநகரில் உள்ள 258 கி.மீ சாலைகளை ஆய்வு செய்து அதில் 58 கி.மீ சாலைகள் சிதிலமடைந்ததை பார்வையிட்ட  அமைச்சர் எ.வவேலு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் மற்றும் கோட்டப் பொறியாளர்களுடன் கலந்தாலோசித்து சில நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி சாலைகளை சரி செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, டிச.3ம் தேதி (நேற்று முன்தினம்) அமைச்சர் எ.வ.வேலு, தரமணி முதல் பெருங்குடி சாலை வரை நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பிறகு இப்பணிகளை விரைவுபடுத்த அதே தொழில்நுட்பத்தை கொண்டு பாதிக்கப்பட்ட மற்ற சாலைப் பணிகளையும் விரைந்து முடிக்க  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து பணிகள் விரைவுபடுத்தப்பட்டது.

கோயம்பேடு, கொளத்தூர், அண்ணா சாலை, தாம்பரம், சோழிங்கநல்லூர் மற்றும் சேலையூர் பகுதிகளில் சாலைகள் செப்பனிடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. இன்னும் சில நாட்களில் சாலைகள் அனைத்தும் செப்பனிடப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Related Stories: