×

சசிகலாவுடன் டிடிவி திடீர் சந்திப்பு: அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து ஆலோசனை

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று திடீரென சசிகலாவை சந்தித்தார்.  சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா தண்டனை காலம் முடிந்து ஜனவரி மாதம் வெளியே வந்தார். அவர், அதிமுகவை கைப்பற்ற அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என்று ஓபிஎஸ்-எடப்பாடிக்கு சசிகலா ஆதரவு தெரிவித்தார்.

சசிகலாவின் இந்த நடவடிக்கைகள் டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுக்கவே அவரை நேரடியாக சந்திப்பதை தவிர்த்தார். ஒருகட்டத்தில் இருவரும் வேறு வேறு வழிகளில் பயணிப்பதாக தெரிவித்தார்.  இதனால், அதிமுகவை கைப்பற்ற டிடிவி.தினகரனும், சசிகலாவுடன் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்பது வெட்டவெளிச்சமாகியது. இதேபோல், சசிகலா தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றபோது அமமுக நிர்வாகிகள் சந்திக்கக்கூடாது என டிடிவி.தினகரன் உத்தரவும் பிறப்பித்துள்ளார். இதனால், பல மாவட்டங்களுக்கு சசிகலா சுற்றுப்பயணம் சென்றபோது அமமுக நிர்வாகிகள் சந்திக்கவில்லை.

தீபாவளிக்கு முன்னதாக 3ம் தேதி டிடிவி.தினகரன் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சசிகலாவிற்கு அழைப்பு விடுத்தார். அதன்பிறகு சசிகலாவுடன் அவர் பேசுவதை தவிர்த்தார். இருவருக்கும் இடையிலான பனிப்போர் அமமுகவினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது.  இந்நிலையில் டிடிவி.தினகரன் திடீரென சசிகலாவை நேற்று காலை தி.நகர் இல்லத்திற்கு சென்று சந்தித்தார். அவரது அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், சசிகலாவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள், சுற்றுப்பயணம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சசிகலா-டிடிவி.தினகரன் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று மரியாதை
ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா சென்று அஞ்சலி செலுத்துகிறார். ஏற்கனவே, அதிமுக பொன்விழாவின் போது அக்டோபர் 17ம் தேதி சசிகலா தனியாக ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். இந்நிலையில், டிடிவி.தினகரன் மற்றும் சசிகலா இணைந்து இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : DTV ,Sasicila , Sasikala, DTV, Next political move, consultation
× RELATED தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!!