×

கொரோனா பாதித்த 4,875 பேரின் மாதிரி டேக்பாத் பரிசோதனை சென்னையில் யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை: நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் தேவசேனா தகவல்

சென்னை: சென்னையில் யாருக்கும்  ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என்று ஓமந்தூரார்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் தேவசேனா கூறினார். ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய அவர்களது மாதிரிகள் சென்னை, புனே, பெங்களூருவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் 150 படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கிண்டி கிங் மருத்துவமனைகளில் தனிப்படுக்கைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரசுக்கு சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யு) படுக்கைகள் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதேபோன்று ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அறிகுறியை கண்டறியும் ‘டேக்பாத்’ பரிசோதனை ஆய்வகமும் பயன்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி கூறுகையில், டேக்பாத் பரிசோதனை ஆய்வகத்தில் பரிசோதனை முடிவு 4 முதல் 6 மணி நேரத்தில் தெரிய வரும் என்றார். நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் தேவசேனா கூறியதாவது:
சென்னையில் கடந்த அக்டோபர் 15க்கு பிறகு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் சந்தேகத்துக்குரிய மாதிரிகளை சேகரித்து ஒமிக்ரான் அறிகுறி இருக்கிறதா என்பதை தற்போது ‘டேக்பாத்’ பரிசோதனை மூலம் ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை சென்னையில் 4,875 பேரின் மாதிரிகள் ‘டேக்பாத்’ பரிசோதனை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அதில் யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. அதாவது சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ‘எஸ்’ ஜீன், ‘இ’ ஜீன், ஆர்.டி.ஆர்.பி ஜீன்கள் இருக்க வேண்டும். இதில் ‘எஸ்’ வகை ஜீன் இல்லை என்றால் அவருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai ,Dr. ,Devasena ,Department of Microbiology , Corona, sample takepath test, Chennai, omigron no impact
× RELATED மது அருந்தும் காட்சி: விஜய், சூர்யாவுக்கு டாக்டர் ரவீந்திரநாத் கோரிக்கை