அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் ஓபிஎஸ், எடப்பாடி மனு தாக்கல்: எதிர்த்து போட்டியிட வந்தவர்களை அடித்து விரட்டியதால் பரபரப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி  பழனிசாமி ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்ய அதிமுக தலைமை அலுவலகம் வந்தவர்களை விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக செயற்குழு கடந்த 1ம் தேதி கூடி, கட்சி சட்ட விதியில் கொண்டுவந்த  திருத்தத்தின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை கட்சி அடிப்படை  உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.  இதற்கான வேட்புமனுதாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது சென்னை  ஓட்டேரியை சேர்ந்த ஓமப்பொடி பிரசாத் சிங் என்ற அதிமுக ெதாண்டர்  ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பம் கேட்டு அதிமுக தலைமை  அலுவலகத்துக்கு வந்தார்.

அவரை அதிமுக தொண்டர்கள் தர்மஅடி கொடுத்து வெளியில்  விரட்டினர். இதுகுறித்து அவர் ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட, ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி  ஆகியோர் நேற்று காலை 11.20 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி  தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பொள்ளாச்சி  ஜெயராமனிடம் வேட்பு மனுக்களை வழங்கினர். அப்போது, தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள்  அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த  ஓபிஎஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு தலைமை கழக நிர்வாகிகள் பொன்னாடை மற்றும்  பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். முன்னதாக  இருவரும் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 153 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஓபிஎஸ், இபிஎஸ் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் கட்டி மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த பதவிக்கு போட்டியிடுபவர்களை 15 பேர்  முன்மொழிந்து, 15 பேர் வழிமொழிந்திருக்க வேண்டும். இவர்கள் 5 ஆண்டு  உறுப்பினர்களாகவும், எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவராக இருக்க வேண்டும்.  இதை காரணம் காட்டி ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் தவிர மற்ற மனுக்கள்  தள்ளுபடி செய்யப்படும்.

இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை  அறிவிக்கப்படும். இதையடுத்து வரும் 13ம்தேதி முதல் 23ம்தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும்  அதிமுக உள்கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடடைபெற உள்ளது.  முதல்நாளில் சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஓமப்பொடி பிரசாத் சிங் என்ற அதிமுக தொண்டர் விருப்ப மனு வாங்க வந்தபோது அடித்து விரட்டப்பட்டதுபோலவே 2வது நாளான நேற்றும் அதிமுக நிர்வாகி ஒருவரை அந்த கட்சியினரே அடித்து, சட்டையை கிழித்து விரட்டி அடித்த சம்பவம் அரங்கேறியது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மாடியில் இருந்தனர்.

அப்போது மதியம் 1 மணி அளவில் சென்னை, வியாசர்பாடி கக்கன்ஜீ நகரை சேர்ந்த எஸ்.விஜயகுமார் என்ற வழக்கறிஞர் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளரான இவரை பார்த்ததும், வேட்பு மனுதாக்கல் செய்ய வருவதாகக் கருதி வளாகத்தில் கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர் அவரை சரமாரியாக தாக்க தொடங்கினர். இவர், பெங்களூர் புகழேந்தியின் ஆதரவாளர் என்று கூறி தாக்கியுள்ளனர். ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, எதிரே உள்ள சாலைக்கு தரதரவென இழுத்து சென்று அங்குள்ள கல்யாண மண்டபத்தில்  அடைத்து வைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு காரில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கறிஞர் விஜயகுமார் கூறும்போது, ‘‘தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவே வந்தேன். ஆனால், வடசென்னை மாவட்ட வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ராஜேஷ், பகுதி செயலாளர் இளங்கோ அதிமுக தொண்டர்களை தூண்டிவிட்டு தாக்கினர். வடசென்னை மாவட்ட செயலாளரை மாற்ற வேண்டும் என்று தலைமைக்கு ஏற்கனவே புகார் கூறியதால் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆட்களை வைத்து அடிக்க வைத்துள்ளார். இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளேன்” என்றார். இதைத்தொடர்ந்து ஓமப்பொடி பிரசாத் சிங்கின் மகன் ராஜேஷ் நேற்று கட்சி அலுவலகம் வந்தார். அவரையும் அதிமுக தொண்டர்கள் அடித்து விரட்டினர்.

அதிமுக உள்கட்சி தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறும் என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே வாக்களித்து அவர்களை தேர்வு செய்வார்கள் என்று தலைமை கடந்த 2ம் தேதி அறிவித்தது. ஆனால், கடந்த 2 நாட்களாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு விண்ணப்பம் வழங்காமல் அடித்து விரட்டியதும், கட்சி நிர்வாகி ஒருவரையே உட்கட்சி மோதல் காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர்  இருக்கும்போதே அடித்து விரட்டியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவை உண்மையிலேயே அதிமுகவில் உள்கட்சி தேர்தல் ஜனநாயக முறையில்தான் நடைபெறுகிறதா? என்ற சந்தேகத்தை கட்சி தொண்டர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியையும் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது, ஒருமனதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

குழப்பம் ஏற்படுத்த முயற்சி: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி: ஜனநாயக முறையில்  வெளிப்படைத்தன்மையோடு அட்டவணை வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கல் முடிந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி கட்சிக்கு தொடர்பு இல்லாத சிலர் சமூக விரோதிகளின் துணையோடு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அடிப்படை உறுப்பினராக கூட இல்லாதவர்கள் உள்நோக்கத்தோடு, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையும் கிடையாது.

முன்மொழிவதற்கு ஆட்களும் கிடையாது. குறிப்பிட்ட நபர் விண்ணப்பம் கேட்கும்போது விதிமுறைகள் குறித்து தலைமை கழகத்தில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவர் சத்தம் போட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். இதுதான் நடந்துள்ளது. அவர் அளித்த புகார்  குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. வழக்கை நாங்கள் பார்த்துக்கொள்வோம். குழம்பிய குட்டையில் ஆதாயம் தேட சிலர் முயற்சி செய்கின்றார்கள். அந்த முயற்சி எடுபடாது. இதுபோன்ற சமயத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது காவல்துறையின் கடமை. அதன்படி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் செயல்படுகிறார்கள். சாலைகளில் நடைபெற்ற சம்பவம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இதற்கு நாங்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக தலைமை அலுவலக மேலாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட நேற்று முன்தினம் விருப்புமனு வாங்கவந்த ஓட்டேரி பாஷ்யம் ரெட்டி முதல் தெருவை சேர்ந்த ஓமப்ெபாடி பிரசாத் சிங்கை கட்சியினர் தாக்கி விரட்டியடித்தனர். இதையடுத்து அவர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், ஓபி.எஸ் மற்றும் இபி.எஸ் தூண்டுதலின் பேரிலேயே தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும், உடனடியாக அதிமுக தலைமை அலுவலக மேலாளரான மகாலிங்கம், மனோகர் உட்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி, அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், மனோகரன் உட்பட 10 பேர் மீதும் கலகம் செய்தல், முறையற்று தடுத்தல், காயம் ஏற்படுத்துதல், சேதம் விளைவித்தல் என 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொண்டர்களிடம் உற்சாகம் இல்லை

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் வேட்பு மனு செய்ய இருப்பது பற்றி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. கட்சியை வழிநடத்திச் செல்ல இருக்கும்   இருவரையும் வரவேற்க பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அதிமுக அலுவலகம்   வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமார் 250 பேர் மட்டுமே வந்திருந்தனர். குறிப்பாக, சென்னையில் உள்ள 8 மாவட்ட செயலாளர்களும், தலா 250 பேரை அழைத்து   வந்தால்கூட 2000க்கும் மேற்பட்டோர் வந்திருக்க முடியும். ஆனால் அவர்களும், தொண்டர்களும் இதில் ஆர்வம் காட்டவில்லை.

பொன்னையன் மழுப்பல்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு   தாக்கலுக்கான காலக்கெடு நேற்று மாலை 3 மணியுடன் முடிந்தது. இதையடுத்து   தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையனிடம் நிருபர்கள், எத்தனை   பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் என்று கேட்டதற்கு ‘‘மொத்தம் எத்தனை பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது   நாளைக்கு (இன்று) தான் தெரியவரும்” என்று மழுப்பலாக பதில் அளித்தார். வேட்புமனு தாக்கல் செய்ய   வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டது பற்றி கேட்டதற்கு அவர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றார்.

Related Stories: