×

தமிழகத்தில் முதன்முறையாக புதுகை அருகே ஒரே இடத்தில் 10 நினைவுத்தூண் கண்டுபிடிப்பு; 11ம் நூற்றாண்டை சேர்ந்தவை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி கொன்னைக்கண்மாயில் ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழர்களின் காலத்தைய நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் மணிகண்டன் மற்றும் ஆய்வுக்கழக உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது: போர், வேட்டையாடுதல், பயிர்களை காக்கும் பொருட்டு விலங்குகளை துரத்துதல் மற்றும் மக்களை காக்கும் பொருட்டு உயிர்நீத்த வீரர்களுக்கு நடுகல், வீரக்கல், நினைவுத்தூண் நடும் பழக்கம் அக்காலத்தில் இருந்துள்ளது.

கொன்னயூர் எனும் இவ்வூர் கொன்றையூர் என்ற உத்தம சோழபுரம் என்ற பெயருடன் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நினைவுத்தூண்களில் 9 கல்வெட்டுகள் மட்டுமே நன்றாக வாசிக்கும் நிலையில் உள்ளன. இவை 5 முதல் 7 அடி உயரம், அடியில் சதுர வடிவம், மேற்பகுதி எண்பட்டை வடிவத்துடன் உள்ளன. தமிழகத்தில் ஒரே இடத்தில் 10 நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த நினைவுத்தூண் கல்வெட்டுகள், உயிர் நீத்தோர் நினைவாக நடப்பட்டு இருக்கலாம் என்று கல்வெட்டுகளிலுள்ள எழுத்துக்கள் மூலம் அறிய முடிகிறது.

இக்கல்வெட்டுகள் 11ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை. அதாவது ராஜேந்திர சோழரின் 10, 17, 28, 29 ஆட்சியாண்டுகள், தொடங்கி முதலாம் குலோத்துங்கனின் எட்டாவது ஆட்சியாண்டு வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் நடப்பட்டுள்ளன. மூன்று கல்வெட்டுகளில் ஆட்சியாண்டு குறித்த தகவல் இல்லை.
மேலும் ராஜேந்திர சோழரின் பெயரோடு கங்கை கொண்ட சோழ செட்டி, மும்முடி சோழ செட்டி என்று பெயர் சூட்டிக்கொண்டுள்ளதன் மூலம் வணிகர்களோடு கொண்டிருந்த தொடர்பை அறிய முடிகிறது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் இவ்வூர் சோழர் கால வணிகக்குழுவில் மிக முக்கிய பங்காற்றியிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Newbush , Discovery of 10 monuments in one place near Pudukai for the first time in Tamil Nadu; Belonging to the 11th century
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...