உத்தராகண்ட் மாநிலத்தில் ரூ.18,000 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 18,000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். குறிப்பாக 8,300 கோடி ரூபாய் செலவில் டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதன்மூலம், டெல்லியிலிருந்து டேராடூன் செல்வதற்கான பயண நேரம் 6 மணி நேரத்திலிருந்து 2.5 மணி நேரமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடம் ஹரித்வார், முசாபர்நகர், ஷாம்லி, யமுனாநகர், பாக்பத், மீரட் மற்றும் பராவத் ஆகிய 7 பகுதிகளை இணைத்து செல்லும் என கூறப்படுகிறது. உத்தராகண்ட்டில் அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடக்கும் நிலையில், 11 திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய நரேந்திர மோடி, நாட்டின் மலை தொடர்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை என்றும் முந்தைய ஆட்சியாளர்கள் இம்மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.  உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 288 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது ஆட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் உத்தரகாண்ட மாநிலம் முன்னிலையில் இருப்பதாகவும், இதற்காக மாநில அரசை தாம் பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Related Stories: