×

தேர்தலில் வாக்‍களிக்‍காவிட்டால் ரூ.350 அபராதம் என சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி பொய்யானது: பஞ்சாப் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

சண்டிகர்: தேர்தலில் வாக்களிக்காத நபர்களின் வங்கி கணக்கில் இருந்து 350 ரூபாய் பிடித்தம் செய்ப்படும் என்ற செய்தி பொய்யானது என பஞ்சாப் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பஞ்சாப், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு காங்கிரஸ் கட்சியின் சரஞ்சித் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் அங்கு பெரிய அளவில் கோஷ்டி மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்காத நபர்களின் வங்கி கணக்கில் இருந்து 350 ரூபாய் பிடித்தம் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்காத நபர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் என பரவி வரும் செய்தி பொய்யானது என பஞ்சாப் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பேர் அறியப்படாத இந்தி செய்தித்தாள் ஒன்றில்  இச்செய்தி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பொய் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவினால் பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவா, மணிப்பூர் சட்டப்பேர்வையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதியுடனும், பஞ்சாப்பின் பதவிக்காலம் மார்ச் 15ம் தேதியுடனும் முடிவடைகிறது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Punjab State Electoral Commission , Election, Fines, Punjab State Election Commission
× RELATED பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள்...