×

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க கோரியும் மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் தனிநபர் மசோதா தாக்கல்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க கோரியும் திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாக்கள் கொண்டு வந்துள்ளார். மருத்துவ படிப்பிற்க்கான நீட் நுழைவு தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மாநில உரிமைகளை பறிக்கும் விதமாகவும் இருப்பதாக கூறி திமுக தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் நீட் தேர்விலிருந்து விலக்கு பெரும் மசோதாவை சட்டமன்றத்திலும் நிறைவேற்றியது.

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளார். மாணவர்களின் மருத்துவர் கனவை தகர்க்கும் விதமாகவும், தமிழ்நாட்டின் 70 ஆண்டு கால சுகாதார கட்டமைப்பை சிதைக்கும் விதமாகவும் நீட் தேர்வு இருப்பதாக வில்சன் தனி நபர் மசோதாவில் கூறியுள்ளார். சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வலியுறுத்தி மற்றொரு தனி நபர் மசோதாவையும் மாநிலங்களவையில் வில்சன் தாக்கல் செய்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேல்முறையீட்டுக்கான உச்சநீதிமன்றத்தை அணுக டெல்லிக்கு செல்வது அனைத்து தரப்பினருக்கும் இயலாத ஒன்றாக இருப்பதால் மண்டல வாரியாக சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டியது அவசியம் என மசோதாவில் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அதிகாரத்தை திருத்தம் செய்வதற்கான மசோதா, காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நபருக்கு ஊறு ஏற்பட்டால் காவல்நிலைய அதிகாரியையே பொறுப்பாகும் சட்டதிருத்தத்திற்க்கான மசோதா, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கோரும் மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை விசிக எம்.பி. ரவிக்குமார் மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Tags : Supreme Court Branch ,Chennai ,P. Wilson , DMK MP Wilson files personal bill in state assembly seeking cancellation of NEET exam and setting up of Supreme Court branch in Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...