×

தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை!: அரசாணை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் இடம்பெறும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்ற அரசாணை குறித்து விளக்கம் அளித்தார். அதில், அரசு வேலையில் சேர விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் குறைந்தது 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியம் உள்ளிட்ட சில துறைகளில் தமிழ் தெரியாதவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளை சரிசெய்யும் வகையிலேயே தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி தமிழ்நாட்டை முன்னேற்றுவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் உள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் இடம்பெறும். தமிழ்நாட்டில் அரசுப்பணியில் அமரக்கூடிய அனைவரும் தமிழ் புலமையுடன் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பழனிவேல் தியாகராஜன், தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சரால் செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர், வனத்துறை தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 80க்கும் மேற்பட்ட தேர்வுகளை பணியாளர் தேர்வாணையம் நடத்துவதால் அதன் எண்ணிக்கையை குறைக்க பரிசீலனை செய்யப்பட்டிருக்கிறது. நிபுணர்களுடன் ஆலோசித்து தேர்வு முறையில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் சிறப்பான கல்வி திட்டம் உள்ளது. கிராமப்புற அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு அரசு வேளையில் வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.


Tags : Minister ,Palaniel Diyakarajan , Government of Tamil Nadu, Competitive Examination, Tamil Lesson, Palanivel Thiagarajan
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...