போரூர் ஏரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!: வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்..!!

சென்னை: போரூர் ஏரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக பெய்ததன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி பல்வேறு குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் தமிழக அரசு போர்கால நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏறக்குறைய 90 சதவீதம் பாதிப்புகள் சரிசெய்யப்பட்டுவிட்டன. ஒரு சில இடங்களில் மட்டுமே மழைநீர் பாதிப்பு இருந்து வருகிறது. அப்பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போரூர் ஏரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

அங்குள்ள பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மழைநீர் செல்லக்கூடிய வரைபடங்களை காண்பித்து முதலமைச்சருக்கு விளக்கம் அளித்து வருகிறார்கள். தொடர்ந்து வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். போரூர் ஏரியை பொறுத்தவை கடந்த ஆட்சி காலத்தில் முறையாக கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை. கனமழை அதிகம் பொழிந்து போரூர் ஏரி நிரம்பிவிட்டால் இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

அந்த வகையிலேயே தற்போது போரூர் ஏரி நிரம்பி அருகே உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையிலேயே முதலமைச்சர் அப்பகுதியில் ஆய்வு செய்து வருகிறார். அதனை தொடர்ந்து அருகே உள்ள மவுலிவாக்கம், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்பை ஆய்வு செய்த பின்னர், அருகே இருக்கக்கூடிய தனலட்சுமி நகரில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். இதையடுத்து, அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

Related Stories: