புத்தக தாத்தா என்று அழைக்கப்பட்ட முருகேசன் உடல்நலக்குறைவால் காலமானார்: மாணவர்கள், பேராசிரியர்கள் இரங்கல்

மதுரை: புத்தக தாத்தா என்று அழைக்கப்பட்ட முருகேசன் மதுரையில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கல்லூரி மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை வழங்கி வந்தார். மதுரை மாட்டம் தண்டலம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் 2-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் பழைய பேப்பர் கடை வைத்து நடத்தி வந்தார்.

தனது 40வது வயதில் கடைக்கு வரும் புத்தகங்களை மட்டும் தனியாக பிரித்து சேகரிக்க தொடங்கினர். ஆசிரியர்கள் சிலர் அந்த புத்தகங்களை ஆர்வமாக வாங்கிச் சென்றதையடுத்து அதிகளவு புத்தகங்களை சேகரிக்க தொடங்கினார். நாளடைவில் தான் சேகரித்த அனைத்து துறை சார்ந்த புத்தகங்களையும் பேராசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு வழங்கி வந்தார்.

இதனால் மாணவர்கள் இவரை புத்தக தாத்தா என்று அழைத்தனர். 80 வயது வரை பல்துறை சார்ந்த எளிதில் கிடைக்காத ஆராய்ச்சி புத்தகங்களை வழங்கி வந்த முருகேசன் இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நலகுறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 25ஆயிரம் புத்தகங்களை சேகரித்து வைத்திருந்த முருகேசனுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவரது மறைவிற்கு மாணவர்கள், பேராசிரியர்கள் என பல்வேறு தரப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: