மன்னிப்பு கேள் பஞ்சாபில் கங்கனாவின் கார் முற்றுகை

சண்டிகர்: பஞ்சாப் சென்ற நடிகை கங்கனாவின் காரை வழிமறித்த கும்பல், விவசாயிகள் குறித்து தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்கும்படி கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்களை காலிஸ்தான்  தீவிரவாதிகள் என்று விமர்சித்தார். மேலும், இந்த சட்டங்களை பிரதமர் மோடி ரத்து செய்வதாக அறிவித்ததையும் விமர்சித்தார். பஞ்சாபியர்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றார். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் சென்று விட்டு கங்கனா காரில் வந்தபோது, பஞ்சாப் மாநிலம், ரூப்நகர் மாவட்டத்தில் கிராத்பூர் சாஹிப் அருகே அவருடைய காரை விவசாயிகள் வழி மறித்தனர். ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் காரை செல்லவிடாமல், விவசாயிகள் குறித்து தவறான கருத்து கூறியதற்காக மன்னிப்பு கேட்கும்படி அவரிடம் வலியுறுத்தினர். அவர்களிடம் கங்கனா பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் அவர் செல்வதற்கு அனுமதிக்க வில்லை.

அரை மணி நேரம் கடந்த நிலையில் அங்கு வந்த போலீசார், விவசாயிகளிடம் பேசி காரை விடுவிடுத்தனர். அதன் பிறகே கங்கனா காரில் அங்கிருந்து சென்றார். இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா வீடியோ செய்தியாக பதிவிட்டுள்ளார். இதில், ‘நான் பஞ்சாபில் நுழைந்தபோது ஒரு கும்பல் என் கார் மீது தாக்குதல் நடத்தியது. அவர்கள் விவசாயிகள் என்று கூறினார்கள்,’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: