×

ஆம்பூர், பேரணாம்பட்டில் மீண்டும் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி: பாத்திரங்கள் உருண்டன

ஆம்பூர்:திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அத்திமாகுலப்பள்ளி, விநாயகபுரம் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் நேற்று அதிகாலை 5.10 மணியளவில் பயங்கர வெடிச்சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் ஒரு சிலர் வெடிச்சத்தத்தை கேட்டதுடன் லேசான அதிர்வையும் உணர்ந்துள்ளனர். ஏற்கனவே கடந்த 28ம் தேதி இப்பகுதிக்கு அருகில் அரங்கல்துருகம் அருகே உள்ள காரப்பட்டு காப்புக்காட்டில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வானது சின்னாங்குப்பம் தொடங்கி குடியாத்தம் மீனூர் மலை வரை தொடர்ந்தது.  

 இந்நிலையில், தற்போது மீண்டும் அத்திமாகுலப்பள்ளி, விநாயகபுரம் ஆகிய இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறையினர் விசாரித்து வருகின்றனர். அதேபோல், வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை, அக்ரஹாரம் ஆகிய கிராமங்களில் கடந்த மாதம் 19, 25ம் தேதிகளில் இரவு நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு பேரணாம்பட்டு அடுத்த கமலாபுரம், சிந்தகணவாய், டி.டி.மோட்டூர், பெரியபள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.

இதனால், வீட்டிலிருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன.  பொதுமக்கள் அனைவரும் பீதியடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர். அரசு அதிகாரிகள் நில அதிர்வு ஏற்பட்ட பகுதியை நள்ளிரவு பார்வையிட்டனர். இந்த லேசான நில அதிர்வால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Ambur ,Peranampattu , Ambur, Peranampatti, earthquake, public panic,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...