×

நீரிழிவாளர்களின் நரம்பியல் பிரச்னை: நரம்பு பாதிப்பை தடுப்பது எப்படி?

இந்த உலகம் கேபிள்களின் வலைப்பின்னலால் சூழப்பட்டிருப்பதைப் போலவே, நம் உடலும் நரம்புகளால் நிரம்பிக் கிடக்கிறது. உடலின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்குச் செய்திகளை எடுத்துச் செல்லும் தூதர்கள் நரம்புகளே. சுவை, மணம், வலி எல்லாமே நரம்புகளால்தான் பரிமாறப்படுகின்றன. நரம்புகள் பாதிப்பு அடைந்தாலோ, உணர்வுகள் உணரப்படாமலே போகும். நம் வீட்டில் உள்ள மின் வயர்கள் மிகவும் பழையதாகவும், பாழடைந்தும் காணப்பட்டால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? உடலில் நரம்புப் பாதிப்பு ஏற்பட்டாலும், அப்படித்தான் தாறுமாறாகப் போகும். நரம்பு பாதிப்பு ஏற்பட ஏராளமான காரணங்கள் உண்டு. காயங்கள், உடல்நலக் குறைவு... இப்படி. நீண்ட காலத்துக்கு ரத்த சர்க்கரை அளவு எகிறிக் கிடந்தாலும் நரம்புகள் பாதிக்கப்படும். அதனால்தான் அதைப் பற்றி இங்கு பேசுகிறோம். உயர் ரத்த சர்க்கரையானது நரம்புகளை முடக்கி, அதன் செய்தி பரவல் பணியைத் தடை செய்யும். இந்தப் பிரச்னைதான் ‘டயபடிக் நியூரோபதி’ என்று சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளாக கட்டுப்பாடே இல்லாத நீரிழிவோடு இருப்போரை இந்தப் பிரச்னை எளிதில் தாக்கும்.

நரம்புப் பாதிப்பை எப்படி அறிவது?
பல ஆண்டு கால அலட்சியத்தின் விளைவாகவே நரம்புப் பாதிப்புகள் ஏற்படும். எனினும், இதற்கான அறிகுறிகளை நாள்தோறும் கவனித்து வருவது மிக அவசியம். அப்படிச் செய்தால் நிலைமை மேலும் மோசம் ஆகாமல் தடுக்க முடியும். எரிச்சல் உணர்வு நரம்பு பாதிப்பின் ஆரம்ப அறிகுறி. இந்த உணர்வு பாதத்திலோ, விரல்களிலோ ஆரம்பிக்கக்கூடும். நரம்பு பாதிப்பு அதிகமான பின், கடுமையான / ஆழமான வலி தோன்றவும் கூடும். அதனால், நீரிழிவாளர்களுக்கு கால் பகுதியில் வலி ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். நரம்பு பாதிப்பினால் ஏற்படுகிற வலியா அல்லது வலிக்கு வேறு காரணங்கள் உண்டா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே நரம்புப் பிரச்னைகள் சரிசெய்யப்படவில்லை எனில், அது இன்னும் தீவிரமாகி, கை, கால்களில் உணர்வு இழப்பு என்கிற மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும்.

நரம்புகள் பாதிப்பு அடையும் நிலைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதில் நாம் ஒவ்வொருவரும் அதிக கவனம் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகள் அப்படி ஒன்றும் கடினமானவை அல்ல.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தல்: காலத்தின் கோலத்தில் அதீத ரத்த சர்க்கரையானது நரம்புகளுக்கும் ஆபத்தை அள்ளித் தரும். நீரிழிவு மருத்துவரை குறிப்பிட்ட இடைவெளியில் சந்தித்து, அவரது அறிவுறுத்தலுக்கு ஏற்ப நடந்துகொள்ளும்போது, இந்தப் பிரச்னையை தவிர்க்க முடியும். உடற்பயிற்சி மிக முக்கியம்: அன்றாட உடற்பயிற்சி நிச்சயமாக நரம்புப் பாதிப்புகளைத் தவிர்க்க உதவி செய்யும். குறிப்பாக - கால் நரம்புகள்.

நரம்புப் பாதிப்புகள் பற்றிய சோதனை மேற்கொள்ளுதல்: நரம்புப் பாதிப்பு என்பது, நாம் அறியாமலே மிக மெதுவாக நடைபெறக் கூடும். காலில் உணர்வுகள் குறைந்து வருவது பற்றி நமக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கூட இருக்கலாம். மருத்துவரைச் சந்திக்கும்போது இதற்கான சோதனைகளையும் மேற்கொள்ளச் சொல்லலாம் (ஆண்டுக்கு ஒருமுறையாவது). எளிமையான பாத சோதனையில் நம் காலின் அமைப்பு, அழுத்தம், அதிலுள்ள துளைகள், வெப்பம் மற்றும் அதிர்வுகளை உணரும் தன்மை ஆகியவை ஆராயப்படும். நரம்புப் பாதிப்பு அறியப்பட்டால், அதற்கேற்ப மேம்பட்ட சோதனைகள் செய்யப்படும்.

கால்களில் கவனம் மிக முக்கியம்: நீரிழிவாளர்களின் பாதப் பராமரிப்பு என்பது கூடுதல் கவனத்துக்கு உரியது. ஏனெனில், அந்த அளவுக்குப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகம். காலை எழுந்தவுடன் நம் பாதங்களைப் பரிசோதிப்பதையும் ஒரு கடமையாகச் செய்ய வேண்டும். நன்கு பொருந்தக்கூடிய காலணிகள், ஷுக்களையே அணிய வேண்டும். ஜிவுஜிவுத்தல் அல்லது கூச்ச உணர்வு இருந்தாலோ, எரிச்சல் இருந்தாலோ மருத்துவரிடம் உடனடியாக ஆலோசிக்க வேண்டும்.


Tags : Neurological problem
× RELATED தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில்...