×

திண்டுக்கல் அருகே மறுகால் திறப்பு விழா கோலாகலம்

திண்டுக்கல்: திண்டுக்கல்‌ அருகே பெரியக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கோம்பையான்பட்டியில் 110 ஏக்கர் பரப்பில் அணைக்குளம் அமைந்துள்ளது. திண்டுக்கல் மற்றும் சிறுமலை பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழையால் சந்தனவர்த்தினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 12 ஆண்டுகளுக்கு பின்பு அணைக்குளம் நிரம்பியுள்ளது. அணைக்குளம் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர், பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட வீரகுடும்பன் மடை என்ற பாலன்குளம், கணக்கன் குளம், குரும்பன் குளம் மற்றும் மடூர் கிராமத்திற்குட்பட்ட குப்பநாயக்கன்குளம் மற்றும் பெரியகுளம் ஆகிய 5 குளங்களுக்கு செல்வது வழக்கம்.

இந்த குளங்கள் நிரம்பியவுடன், அணைக்குளம் மறுகால் பகுதி மண்ணால் அடைத்து வைக்கப்படும். அடுத்த ஆண்டு மீண்டும் குளம் நிரம்பினால் ‘கோப் வெட்டுதல்’ என்ற விழா நடத்தி மறுகால் வழியாக 5 குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்படும். 12 ஆண்டுகளுக்கு பிறகு அணைக்குளம் நிரம்பியதை அடுத்து ‘கோப் வெட்டுதல்’ விழா நேற்று நடைபெற்றது. பாரம்பரிய வழக்கப்படி, கோம்பையான்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்திலிருந்து தாரை தப்பட்டை முழங்க வெடி வெடித்து ஊர்வலமாக புறப்பட்ட பொதுமக்கள், அணைக்குளம் வாய்க்கால் பாலம், கல்லறை தோட்டம் மதகு, நாயக்கன்மேடு மதகு, பெரிய மதகு, கன்னிமார் கோயில், ஆலமரத்து அந்தோணியார் சிலுவை, செங்கடை மதகு ஆகிய இடங்களில் சாமி கும்பிட்டனர்.

பின் அணைக்குளத்தில் இருந்து மறுகால் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதன்மூலம் புகையிலைப்பட்டி, மணியக்காரன்பட்டி, அன்னை நகர், வன்னியம்பட்டி, கஸ்தூரி நாயக்கன்பட்டி, பில்லமநாயக்கன்பட்டி, நடுப்பட்டி, மற்றும் பெரியகோட்டை ஆகிய பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மறுகால் வெட்டிவிடும் விழா நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kulagalam ,Tindukkal , Re-opening ceremony near Dindigul
× RELATED கனமழை காரணமாக அரியலூர், திண்டுக்கல்...