நாகர்கோவில்: நாகர்கோவிலில் மாநகராட்சி பகுதியில் 20 நாட்களுக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்து, தற்போது கழிவுகளும் கலந்துள்ளதால், மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகி உள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. குமரி மாவட்டத்திலும் கடந்த மாதம் 11ம் தேதி முதல் தொடர்ச்சியாக 4 நாட்கள் இடைவிடாமல் மழை கொட்டியது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த வாரமும் மலையோர பகுதிகளில் பெய்த மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
வெள்ள சேதங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து ஆய்வு செய்தார். மத்திய குழுவும் வந்து ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளது. சாலைகள் துண்டிப்பு, கால்வாய்கள் உடைப்பு, குளங்கள் உடைப்பு போன்றவை தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகின்றன. விளை நிலங்களில் சூழ்ந்த வெள்ளத்தால் பயிர்கள் சேதம் அடைந்தன. கற்களும், மணலும் குவிந்ததால், வயல்கள் மைதானங்களாக மாறின. தற்போது அந்த மணல், கற்களை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளம் வடிந்து பல்வேறு கிராமங்கள் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னரும், நாகர்கோவில் மாநகர பகுதிக்குடபட்ட ஒரு சில பகுதிகள் மட்டும் இன்னும் தண்ணீரில் மிதக்கும் நிலை உள்ளது.
அந்த வகையில், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டு பகுதியான பள்ளவிளை வசந்தம் நகர், விநாயகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 20 நாட்களாக வெள்ள நீர் வடியாமல் அப்படியே கிடந்ததன் விளைவு தற்போது இவை கழிவு நீராக மாறி உள்ளன. தண்ணீர் பெருக்கத்தால், இந்த பகுதியில் உள்ள வீடுகளில் செப்டிக் டேங்க் நிரம்பி கழிவுகள் வெளியே வந்துள்ளன. தவளை, பாம்பு உள்ளிட்ட பூச்சிகளும் படையெடுத்துள்ளன. துர்நாற்றம், கொசுத்தொல்லை, செப்டிக் டேங்க் கழிவுகள் வெளியேற்றம், சாக்கடை கலப்பு என பல்வேறு சுகாதார சீர்கேடுகளால் இந்த பகுதியில் உள்ள மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகி உள்ளனர்.
சுமார் 150 வீடுகளுக்கு மேல் கழிவு நீர் சூழ்ந்து, நிற்கிறது. இந்த வீடுகளில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வர பெரும் சிரமப்படும் நிலை உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு சிரமப்படுகிறார்கள். கழிவு நீரில் சென்றால் தொற்று ஆபத்து வரும் என்பதால், அந்த பகுதியில் உள்ளவர்கள் சேர்ந்து வாடகைக்கு லோடு ஆட்டோ பிடித்து, மெயின்ரோடு வரை குழந்தைகளை அழைத்து வந்து பின்னர், பள்ளி வேன்களில் ஏற்றி அனுப்பி வைக்கிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சி பணியாளர்களிடம் பலமுறை இது தொடர்பாக புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சியின் வாட்ஸ் அப் எண்ணுக்கும் புகார் அனுப்பினோம்.
ஆனால் எந்த வித பதிலும் இல்லை என்று மக்கள் மிகுந்த வேதனையுடன் கூறினர். கடந்த 20 நாட்களாக என்ன செய்வதென்று தெரியாமல், கழிவு நீருக்குள் குடியமர்ந்து வருகிறோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே பொது மக்கள், குழந்தைகள் நலன் கருதி உடனடியாக இந்த பகுதியில் சூழ்ந்துள்ள கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதிபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை
பார்வதிபுரத்தில் இருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் பெருவிளை சாலையில், குழாய் பதிப்பதற்காக சாலையை தோண்டினர். ஆனால் அரைகுறை பணியால் இந்த சாலை தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இந்த வழியாக தான் ஆம்புலன்சுகள் செல்லும். மினி பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களும் செல்லும் சாலை ஆகும். ஆனால் இந்த சாலை இப்போது உடைந்து கிடப்பதால், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.