×

கடலூர் மலை கிராமத்தில் சிக்கிய முதலை: பொதுமக்கள் பீதி

கடலூர்: கடலூர் அருகே மலை கிராமத்தில் எட்டு அடி நீள முதலை சிக்கியது. முதலை நடமாட்டத்தை தொடர்ந்து அப்பகுதி கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடலூர் அருகே கேப்பர்மலை, ராமாபுரம், வெள்ளக்கரை, எம் புதூர், எஸ் புதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. வாழை, முந்திரி என அடர்ந்த தோப்புகள் அமைந்துள்ளன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மலை கிராமங்களிலும் ஏரி , குளங்கள் நிறைந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் நேற்று இரவு வெள்ளக்கரை கிராம பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முதலை நடமாட்டத்தை சில கிராம மக்கள் கண்டுள்ளனர். முதலை நடமாட்டத்தை தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளான கிராம மக்கள் உடனே இரவோடு இரவாக முதலை நடமாட்டத்தை உறுதி செய்வதற்காக அப்பகுதியில் திரண்டனர். அப்போது ஊர்ந்து சென்று கொண்டிருந்த முதலையை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகினர். உடனே இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு இரவோடு இரவாக வனத்துறையினரும் சென்றனர்.

வன அலுவலர் அப்துல் ஹமீது மற்றும் வனக்காவலர்கள் உள்ளிட்டவர்கள் இன்று அதிகாலை வெள்ளக்கரை பகுதியில் சுற்றித்திரிந்த முதலையை பிடித்து சிதம்பரம் பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர். சுமார் 8 அடி நீளம் உள்ள முதலை மலை கிராமத்திற்கு எப்படி வந்தது என்பது புரியாத நிலையாக உள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர். மலை கிராமத்தில் ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம்  சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது முதலை நடமாட்டம் அப்பகுதி கிராம மக்களை பீதிக்கு உள்ளாக்கி உள்ளது.

மழை வெள்ளத்தில் கெடிலம் ஆறு வழியாக மலை கிராமத்தில் நுழைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே அப்பகுதியில் உள்ள நீர் நிலை மற்றும் ஓடை வாய்க்கால் உள்ளிட்ட இடங்களிலும் கிராம மக்கள் முதலைகள் நடமாட்டம் வேறு ஏதேனும் உள்ளதா என கண்டறிந்து வருகின்றனர். முதலை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

Tags : Cadalur , Crocodile trapped in Cuddalore hill village: Public panic
× RELATED மூதாட்டி காலை கடித்து குதறிய முதலை