சாலையில் விரிசலால் போக்குவரத்து நிறுத்தம்; ஏற்காடு-குப்பனூர் சாலையில் மீண்டும் மண் சரிவு: சீரமைப்பு பணி தீவிரம்

ஏற்காடு: ஏற்காடு-குப்பனூர் சாலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த மழையின்போது, சேலம்-ஏற்காடு சாலையில் 3வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. பல இடங்களில் பாறைகள் சரிந்து விழுந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ராட்சத பாறையை வெடி வைத்து உடைத்து, அப்புறப்படுத்தினர். இதேபோல், குப்பனூர்-ஏற்காடு சாலையிலும் தரைப்பாலம் உடைந்து வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, சாலைகளில் பாறைகள் குவியலாக வந்து தேங்கியது. தார் சாலை பெயர்ந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. உடனே குப்பனூர் சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதையடுத்து மழைக்காலம் முடியும் வரை ஏற்காட்டிற்கு செல்லும், இரு பாதையிலும் கனரக வாகன போக்குவரத்திற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்பேரில், தற்போது ஏற்காட்டிற்கு சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை அடிவார பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் நிறுத்தி திரும்பி அனுப்பி வருகின்றனர். இச்சூழலில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பெய்த கனமழையால், குப்பனூர் சாலையில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வந்தது. நேற்று, குப்பனூர் சாலையில் கொட்டச்சேடு அருகே தார்சாலையில் விரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியில் சாலையோரம் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், இருசக்கர வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் கூட ஒரு வித பயத்தில் சென்றனர்.

மண் சரிவு குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு வருவாய்த்துறையினர் தகவல் கொடுத்தனர். உடனே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடம் வந்து ஆய்வு செய்தனர். இன்று காலை மண் சரிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சாலையில் ஏற்பட்ட விரிசல் பகுதியில் அதிகளவு மணல் மூட்டைகளை அடுக்கி, சாலையை செப்பனிட திட்டமிட்டுள்ளனர். அந்த பணியையும் நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த மண் சரிவின் காரணமாக குப்பனூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணி முழுமையாக நிறைவடைந்த பின், கார், பைக் வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி வழங்க இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

More