×

மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல்: ஆந்திரா, ஒடிசாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை மையம்..!!

மும்பை: மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் தீவிர புயலாக மாறி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை இடையே நாளை மறுநாள் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பகல் 11:30 மணியளவில் புயலாக உருமாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ஜாவத் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாவத் புயல் தீவிர புயலாக மாறி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா இடையே நாளை மறுநாள் மாலையில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் புயல் பாதிப்பு பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

மேலும் உணவு, குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு உட்பட அத்தியாவசிய சேவைகள் பொதுமக்களுக்கு தடை இல்லாமல் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் முடிக்கிவிட்டுள்ளன. இதனிடையே புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா வழியாக செல்லும் 95 விரைவு ரயில்கள் இன்று முதல் 3 நாட்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Indian Meteorological Department ,Andhra Pradesh, Odisha , Bay of Bengal, Javat storm, Red Alert, Indian Meteorological Center
× RELATED வெப்ப அலை தாக்கம்; மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்