×

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா: ஒமிக்ரான் வார்டில் அட்மிட்

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சி வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒமிக்ரான் பரிசோதனைக்காக அவரது சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சில லட்சம் பேரின் உயிரை பறித்தது. தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்தாலும் கொரோனாவின் உருமாற்ற வைரஸ் பற்றிய அச்சம் மட்டும் ஓயவில்லை. ஒவ்வொரு வகையாக உருமாற்றமடைந்து உலக நாடுகள் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது.

ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்ற வரிசையில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வீரியமிக்க ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் 29க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதனால், உலக முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி ஒமிக்ரான் பரவி உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களின் பட்டியலை எடுத்தனர்.

அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் இருந்த கடந்த மாதம் கர்நாடகாவுக்கு வந்த 95 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம், இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்து விட்டது. இது, மற்ற கொரேனா வைரஸ்களை விட 5 மடங்கு வேகமாக பரவும் என்பதால், ஒன்றிய, மாநில அரசுகள், இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வெளிநாட்டு பயணிகள் மூலம் பரவுவதை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனாவுக்கு பின், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு முதன்முறையாக நேற்றிரவு 11.10 மணிக்கு ஸ்கூட் டைகர் விமானம் பயணிகளுடன் வந்தது. இதில் வந்த 141 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 56 வயது நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஒமிக்ரான் தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

இவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.அந்த நபர் சிங்கப்பூரிலிருந்து தஞ்சையில் உள்ள அவரது உறவினரை பார்க்க வந்துள்ளார்.  அவருடன் விமானத்தில் வந்த 140 பேர் சுமார் 4 மணி நேரம் பயணம் செய்துள்ளனர். மேலும் கொரோனா பரிசோதனை முடிவிற்காக அனைவரும் விமான நிலையத்திலே ஒன்றாக அமர வைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதார துறையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

140 பயணிகள் கண்காணிப்பு
திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறியது: அரசு மருத்துவமனையில் மது போதை மீட்பு மையம்  ஒமிக்ரான் சிகிச்சை சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வார்டில் சிங்கப்பூரிலிருந்து நேற்றிரவு வந்த ஒரு பயணி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளாரா என கண்டறிய முதல்கட்ட பரிசோதனை(ஸ்கிரினிங்) நடந்து வருகிறது. டபிள்யுஹெச்0(ஒமிக்ரான்) என்பதை உறுதி செய்ய அவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள் சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வர ஓரிரு நாட்கள் ஆகும். மேலும் அவருடன் வந்த 140 பேரை சுகாதாரதுறை இணை இயக்குனர் தலைமையில் சுகாதார பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றார்.



Tags : Corona ,Singapore ,Tiruchi ,Omicron , Corona for a traveler from Singapore to Trichy: Admitted to Omigron Ward
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...