×

மருதூர் பேரூராட்சியில் சேறும் சகதியுமான சாலை நோயாளிகளை கட்டிலில் தூக்கி கொண்டு வரும் அவல நிலை-ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நின்ற 108 ஆம்புலன்ஸ்

குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டு விஸ்வநாதபுரத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் பலமுறை பல்வேறு போராட்டங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் அளித்தும் இன்றுவரை கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருதூர் பேரூராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர், தொடர்ந்து பெய்து வரும் கன மழையில் விஸ்வநாதபுரத்திற்குச் செல்லும் சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் மண் சாலையாக உள்ளது, இந்த சாலையில் மழைநீர் தேங்கி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் செல்ல முடியாத அளவிற்கு வாய்க்கால் போல் மழை நீருடன் சேறும் சகதியுமாக உள்ளது, இதில் நான்கு சக்கர வாகனங்கள் சென்றால் சேற்றில் சிக்கி பல்வேறு சிரமங்களுக்குள்ளாவதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 70 வயது முதியவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தபோது உள்ளே வர முடியாது எனக் கூறி ஒரு கிலோமீட்டருக்கு வெளியே உள்ள சாலையில் நின்றது, அப்பகுதி மக்கள் முதியவரை கட்டிலில் வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் சேறும் சகதியுமான மண் சாலையில் தூக்கி வந்து சாலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி விட்டனர், தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்கள் சேற்றில் சிக்கி சிரமப்படுவதாகவும், நிறைமாத கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு கிலோமீட்டர் நடந்து வரும் அவல நிலையும் ஏற்படுவதாகவும், இதுபோன்ற சூழ்நிலைகளில் நோயாளிகள் சிலர் உயிரிழப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

உடனடியாக தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும், மருதூர் பேரூராட்சியும் விஸ்வநாதபுரத்திற்கு சாலை அமைத்தும் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் கோரிக்கை வைக்கின்றனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகின்ற பேரூராட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Marudur , Kulithalai: More than 150 in Viswanathapuram, 12th Ward, Marudur Municipality near Kulithalai, Karur District.
× RELATED மருதூர் ஊராட்சியில் 2019 முதல் 2022 வரை...