×

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து நெசவாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி நெசவாளர்கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சக்கம்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட தறிக்கூடங்கள் மூடப்பட்டது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களும், 100க்கும் மேற்பட்ட தறிக்கூடங்களும் உள்ளன.

இங்கு உயர்தர காட்டன் சேலைகள் மற்றும் வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதுதவிர, அரசு வழங்கும் சேலை, வேட்டிகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு நெசவாளர்கள் தறிக்கூடங்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் அவரது சொந்த வீடுகளிலும் சேலை மற்றும் வேட்டிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் வேட்டி சேலைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நூல் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக உற்பத்தி செலவு அதிகாரித்துள்ளதால் நெசவாளர்களுக்கு லாபம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

நூல் விலை உயர்வால் நெசவாளர்கள் பெறும் அவதியுற்று வரும் நிலையில், ஒன்றிய அரசு நூல் விலையை குறைக்க வேண்டும் என்று முதலமைச்சரும் கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், நூல் விலை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சக்கம்பட்டி பகுதி நெசவாளர்கள் நூல் விலை உயர்வை கண்டித்து நேற்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட தறிக்கூடங்கள் மூடப்பட்டிருந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி நெசவாளர்கள் கூறுகையில், ‘நூல்விலை உயர்வால் சேலை, வேட்டிகள் உற்பத்தி செய்வது சிரமமாக உள்ளது. மேலும் ஒன்றிய அரசு நூல் விலைய கட்டுப்படுத்த வேண்டும். நூல் மற்றும் ஜவுளி ரகங்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் நூல் வழங்க வேண்டும். தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம்’ என்றனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆண்டிபட்டி நகர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஒன்றிய அரசு நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், ஏராளமான தறிக்கூட உரிமையாளர்கள் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Union Government , Andipatti: Weavers went on a one-day strike yesterday in the Chakkampatti area near Andipatti to control the rise in yarn prices.
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...