×

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 7ம் தேதி முதல் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும். மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பொழியும்.

இன்று தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 5ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து டிசம்பர் 6ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையோர உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. டிசம்பர் 6, 7ல் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.


Tags : Kumari ,Nella ,Tamil Nadu ,Meteorological Survey Center , Kumari, Nellai, heavy rain, meteorological study
× RELATED இரட்டை ரயில்பாதை சிக்னல் பணிகள்...