×

பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 44 வாரங்களுக்கு தொடர் நிகழ்ச்சிகள்: செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்

சென்னை: பாட்டுடைத் தலைவன் மகாகவி பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக, அவரின் அருமை பெருமைகளை அகிலமே வியந்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆண்டுகள் 100 ஆனாலும், இன்னும் 1000 ஆண்டுகள் கடந்தாலும், பெரும்புலவன் பாரதியின் கவிதைகளில், பாடல்களில் நாட்டுப்பற்று, ஒற்றுமையுணர்வு இவைகளையெல்லாம் தாண்டி, இன்றைய தமிழ்ச் சமுதாயத்துக்கு அவசியமான சமூக, பொருளாதார உரிமைகள் குறித்தவை இன்றல்ல; என்றென்றும் பெரும்புலவன் பாரதி அவசியம் தேவை’’ என்று பாரதி நினைவு விழாவிலே குறிப்பிட்டார்.

மேலும், பாரதியாரின் பெருமைகளைப் போற்றிடும் வகையில் இதுவரையில் எந்த முதலமைச்சரும் அறிவிக்காத வகையில், 14 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் பெரும்புலவன் பாரதியாரின் நினைவு நூற்றாண்டினை முன்னிட்டு, அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித் துறையின் சார்பில் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

முதலமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்துகின்ற வகையில், சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் வரும் டிசம்பர் திங்கள் 4ஆம் தேதி தொடங்கி 44 வாரங்களுக்கு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, பள்ளிக் கல்வித்துறை, வானவில் பண்பாட்டு மையம் மற்றும் பாரதி புகழ்பாடும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று மாலை 6 மணி தொடங்கி நடைபெறவுள்ளது.

பாரதியார் நினைவு இல்லத்தில், முதல் நிகழ்ச்சியினை நாளை (04.12.2021) மாலை 5 மணிக்கு தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்கள் வழங்கும் பாரதியின் புகழ்பாடும் நாதஸ்வர இசை நிகழ்ச்சியினை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கிறார். மகேசன் காசிராஜன், அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, முனைவர் வீ.ப.ஜெயசீலன், இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை சொற்பொழிவாளர் பாரதி கிருஷ்ண குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

Tags : Saminathan , bharathiyar
× RELATED ‘கொலீஜியத்தால் சுதந்திரமான...