×

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சேவையாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி, ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மல்லவாடி - அரசு மறுவாழ்வு இல்லத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்து, பார்வை குறைவுடையோருக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (03.12.2021) தலைமைச் செயலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவைபுரிந்ததற்காக சிறந்த சமூகப் பணியாளர் விருதினை ஸ்மிதா சாந்தகுமாரி சதாசிவன் அவர்களுக்கும், சிறந்த நிறுவனத்திற்கான விருதினை விருதுநகர் மாவட்டம் - சப்தகிரி மறுவாழ்வு அறக்கட்டளைக்கும், சிறந்த ஆசிரியருக்கான விருதினை செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்ததற்காக ரா.ஜெயந்தி அவர்களுக்கும், பார்வை குறைவுடையோருக்கு கற்பித்ததற்காக ந.மாரியம்மாள் அவர்களுக்கும், சிறந்த பணியாளர்/ சுயதொழில் புரிபவர் விருதினை சீ. மாதேஸ்வரன், மு.ரு.ரேவதி மெய்யம்மை, முனைவர் ர. இராஜா, வே. தங்ககுமார், ஜோயல் ஷிபு வர்க்கி, சு. அப்துல்லத்தீப், அனுராதா, சே. சரண்யா, ஜீ. கணேஷ் குமார் ஆகியோருக்கும், ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் சிறந்த ஆசிரியருக்கான விருதினை தே. முத்துச்செல்வி மற்றும் கா.சர்மிளா ஆகியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநருக்கான விருதினை ஏ.ரதீஷ் அவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய நடத்துநருக்கான விருதினை சி.திருவரங்கம் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி, பாராட்டினார். மேற்காணும் விருது பெறும் நபர்கள் / நிறுவனங்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் முதன்முதலாக தொழுநோயால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்விற்காக பரனூரில் 1971-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அரசு மறுவாழ்வு இல்லம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் பத்து அரசு மறுவாழ்வு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. உணவு, உறைவிடம், உடுக்க உடை, மருத்துவ வசதிகள் இல்லவாசிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், இல்லவாசிகளுக்கு பாய் நெய்தல், துணி நெய்தல், தையல் மற்றும் காலணி தயாரிப்பு போன்ற பல்வேறு தொழிற்பயிற்சி அளிக்கப்படுவதுடன் அவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கேற்ப ஊதியமும் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மல்லவாடியில் அரசு மறுவாழ்வு இல்லம் 1973-ஆம் ஆண்டு 425 பயனாளிகள் தங்கும் வகையில் 14,300 சதுர அடி நிலப்பரப்பில் கட்டடம் கட்டப்பட்டது. இந்த அரசு மறுவாழ்வு இல்லக் கட்டடம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதால், இல்லவாசிகளின் நலன் கருதியும், அவர்களின் பயன்பாட்டிற்காகவும், மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு 1 கோடியே 64 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இந்த மறுவாழ்வு இல்லத்தில் 40 நபர்கள் தங்கும் வகையில் 20 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது இவ்வில்லத்தில் 36 இல்லவாசிகள் தங்கி பயன்பெற்று வருகின்றனர்.

மேலும், மாவட்ட நூலக ஆணைக் குழுக்களின் கீழ் செயல்படும் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாகவுள்ள நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டும் உதவியாளர் பணியிடங்களுக்கு பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த பார்வை குறைவுடையோருக்கு சிறப்பு நேர்வாக நூல் கட்டுநர் பணியிடத்திற்கு 17 நபர்களுக்கும், நூல் கட்டும் உதவியாளர் பணியிடத்திற்கு 14 நபர்களுக்கும் என மொத்தம் 31 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், பொது நூலகத் துறை இயக்குநர் (பொறுப்பு) எஸ்.நாகராஜமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : International Transformers' Day ,CM ,Q. Stalin , MK Stalin
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...