×

கொரோனா ஊரடங்கு காரணமா?: நாட்டில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகித பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 9வது இடம்..!!

சென்னை: நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்கள் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளன. நாடு முழுவதும் நகர்புறங்கள் மற்றும் அனைத்து பகுதிகளில் நிலவும் வேலை வாய்ப்பின்மை தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பு முடிவுகளை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி 11 மாநிலங்களில் நகர்ப்புறங்களில் அனைத்து வயதினருக்குமான வேலைவாய்ப்பின்மை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 15 வயது முதல் 29 வயதினருக்கான வேலை வாய்ப்பின்மை, அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. 2020 - 21 நிதியாண்டில் முதல் காலாண்டில், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 9.4 சதவீதமாக இருந்தது. இது ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் 22.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகித பட்டியலில் தமிழ்நாடு 9வது இடத்தை பிடித்துள்ளது. உத்தராகண்ட், கேரளா, ஒடிசா, ராஜஸ்தான், மராட்டியம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் உள்ளன.

குஜராத் மாநிலத்தில் வேலை வாய்ப்பின்மை சதவீதம் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தின்படி 3.8 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா ஊரடங்கே வேலை வாய்ப்பின்மை அதிகரித்ததற்கான முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. சிலர் விவசாயத்திற்கு திரும்பி தங்களை தற்காத்துக் கொண்டனர் என்றும் ஆனால் பெரும்பாலானோர் வேலையிழந்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Corona ,Tamil Nadu , Corona, Urban Unemployment, Tamil Nadu
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...