பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.42 லட்சம் நலத்திட்ட உதவிகள் தூத்துக்குடியில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும்: வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழையால் பாத்திக்கப்பட்ட மக்களுக்கு ரூ.42.60 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை நீர் தேங்காமல் இருக்க விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் 1.45 மணிக்கு தூத்துக்குடி வந்தார். அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

மதிய உணவிற்கு பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்ட முதல்வர், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையன்ட்நகர் 1, 2வது தெருக்களுக்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் செந்தில்ராஜிடம் அப்பகுதி பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு தேங்கிய  மழைநீரில் சிறிது தொலைவு நடந்து சென்று ஆய்வு செய்தார்.  அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் பல ஆண்டுகளாகவே ஒவ்வொரு மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள்ளும், பொதுமக்கள் வெளியே வரமுடியாத நிலையும், சாலைகள் குளங்களாக மாறிவிடுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் அங்கு தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்பகுதி பொதுமக்களிடம் வருங்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முதல்வருடன் அமைச்சர்கள் நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்பி, கலெக்டர் செந்தில்ராஜ், வெள்ளத்தடுப்பு கண்காணிப்பு அதிகாரி சிஜி தாமஸ் உள்பட பலர் சென்றனர். தொடர்ந்து முதல்வர் பிரையன்ட் நகர் 6வது தெரு, சிதம்பரநகர், பாளை ரோடு வழியாக புதிய மாநகராட்சி அலுவலகம் சென்றார்.

அங்கு அவர் மழை வெள்ள பாதிப்பு, மழை நீரை வெளியேற்றுவது குறித்து அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஏவிஎம் மகாலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் 3 ஆயிரம் பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், பெட்ஷீட், பாய் உள்ளிட்ட 12 விதமாக பொருட்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு தொகுப்பும் ரூ.1420 மதிப்பில் மொத்தம் ரூ.42.60 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றார். மெயின் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு தேங்கிய மழை நீரில் 400 மீட்டர் நடந்து சென்று அங்குள்ள வீடுகளில் இருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் 10 ஆண்டுகளாக மழைக்காலங்களில் இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் தாங்கள் மிகவும் பாதிப்படைந்து வருவதாக கூறினர். இப்பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார்.

* சிறுமிகளுக்கு முதல்வர் அறிவுரை

தொடர்ந்து முதல்வர் தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் தேங்கிய மழை நீரை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் அவரிடம் ஆர்வமுடன் கைகுலுக்குவதற்காக கைகளை நீட்டினர். அனைவரின் கைகளையும் குலுக்கிய முதல்வர் அவர்களிடம் நலம் விசாரித்தார். இதுபோல அங்குள்ள நர்சிங் கல்லூரி மாணவியரிடமும் குறைகளை கேட்டறிந்த முதல்வர், மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அப்போது கூட்டத்திற்குள் இருந்து இரு சிறுமிகள் முதல்வரை பார்க்கும் ஆசையில் முதல்வரின் பின்னால் ஓடி வந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுக்க முயன்றனர். வேகமாக நடந்து சென்ற முதல்வர் அவர்களை திரும்பி பார்த்து அருகில் வரவழைத்து பெயர், படிப்பு உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்து நன்றாக படிக்க வேண்டும் என்றார்.

Related Stories: