வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் சிக்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய மாஜி தலைவர் தூக்கிட்டு தற்கொலை: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமாக செயல்பட்டவர்

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் சிக்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கமான இவர், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அதிமுக விஐபிக்களின் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.வெங்கடாசலம். இவர் கடந்த 1988ல் மாநில வனத்துறை சேவை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் பணிமூப்பு அடிப்படையில் கடந்த 1994ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். பிறகு மாநில வனத்துறையில் பல்வேறு நிலைகளில் தமிழகம் முழுவதும் பணியாற்றி கடந்த 2018 செப்டம்பர் மாதம் வெங்கடாசலம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பணியில் இருக்கும் போது அதிமுக அரசின் அமைச்சர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால், அதற்கு பரிசாக ஓய்வு பெற்ற நிலையில் வெங்கடாசலம் கடந்த 2019ல் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக  நியமிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, வெங்கடாசலம் 2 ஆண்டாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வகித்தார். தனது பதவிக்காலத்தில் வெங்கடாச்சலம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி  முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதேபோல், கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவியாளர் மற்றும் தட்டச்சர் போன்ற பதவிகளுக்கு தகுதி இல்லாத நபர்களை பணம் பெற்றுக் கொண்டு பணியில் சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் குவிந்தது. அதன் அடிப்படையில் வெங்கடாசலம் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 23ம் தேதி மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் வெங்கடாசலத்திற்கு சொந்தமான வேளச்சேரியில் உள்ள வீடு, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மாப்பளையத்தில் உள்ள வீடு, கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் என 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இரண்டு நாட்கள் நடந்த சோதனையில் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 13.50 லட்சம் ரொக்க பணம், 11 கிலோ தங்கம், 15.25 கிலோ சந்தன மரம் மற்றும் சந்தன மரத்தால் ஆன 2 ேதவி சிற்பங்கள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தன கட்டைகள் வீட்டில் வைத்திருந்ததால் வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் பணம் குறித்து விளக்கம் கேட்டு வெங்கடாசலத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தனர். இதற்கிடையே வெங்கடாசலம் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக விஐபிக்களுக்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.  இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் எப்படி விளக்கம் அளிப்பது என்று கடும் மன உளைச்சலில் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சென்னை வேளச்சேரி நியூ செக்ரட்டரியேட் காலனி 2வது தெருவில் உள்ள பங்களாவில் நேற்று அவருடன் மனைவி வசந்தி மற்றும் வேலைக்கார பெண் செல்வி மட்டும் இருந்துள்ளனர். மதியம் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்ற வெங்கடாசலம், மாலையில் மின்விசிறியில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வேளச்சேரி போலீசார் வந்து கதவை உடைத்து வெங்கடாசலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரதுசெல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அதிமுக அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெங்கடாசலத்தின் மகன், மகள் வெளிநாட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுக்கு சந்தன மர கட்டில் கொடுத்தவர்

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த வெங்கடாசலம், மிகவும் ஆங்கிலப் புலமை பெற்றவர். பூகோளத்தை நன்றாக அறிந்தவர். எந்த மண்ணில் எந்த மரம் வளரும் என்பதை துல்லியமாக கூறுவார். அந்த அளவுக்கு மண் வளம் பற்றிய அனைத்து தகவல்களும் தெரியும். 1991-96ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவருக்கு சந்தன மரத்திலான கட்டில் செய்து கொடுக்கப்பட்டது. வனத்துறை அதிகாரியாக இருந்த வெங்கடாசலம்தான், இதை செய்து கொடுத்துள்ளார். இதற்காக அப்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன் வேலூரைச் சேர்ந்த பொதுப்பணித்துறை பெண் இன்ஜினியரிடம் ₹2.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  விசாரணைக்குப்பின் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் தானும் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் வெங்கடாசலம் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: