×

வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக புகார்: சரவணா சூப்பர் ஸ்டோரில் 2வது நாளாக சோதனை: பல கோடி மதிப்பு ஆவணங்கள், பணம் சிக்கியதாக ஐடி அதிகாரிகள் தகவல்: உரிமையாளர்களிடம் விசாரணை

சென்னை: சென்னையில் சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் நகைக்கடை, பர்னிச்சர் உள்ளிட்ட 12 இடங்களில் 2வது நாளாக நேற்று நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.  சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நகைக்கடை, பர்னிச்சர் கடைகள் இயங்கி வருகிறது. சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் பகுதிகளில் கிளைகள் உள்ளன.

 கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் உள்ள சரவணா செல்வரத்தினத்திற்கு சொந்தமான 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.


முதல்நாள் சோதனையில் கடந்த 2 ஆண்டுகளில் கடைகளில் நடந்த வியாபாரம் தொடர்பான ஆவணங்கள்கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 2வது நாளாக நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவை தொடர்ந்து விடிய விடிய நீடித்தது. இந்த சோதனையில் வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து உரிமையாளர்கள், மற்றும் கடைகளின் மேலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணா செல்வரத்தினம் நகைக்கடைக்கு கொள்முதல் செய்யப்பட்ட நகைகள் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 2020ம் ஆண்டு வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டிய ஆவணங்களை வைத்தும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்தும் அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறையின் இரண்டாவது நாள் சோதனையால் நேற்றும் பொருட்களை வாங்க கடைகளுக்கு வந்த பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் கடைகளில் இருந்து ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இந்த சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கணக்காய்வு செய்த பிறகு தான் எவ்வளவு கோடி மத்திய அரசுக்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Saravana Super Store , Saravana Store, Check, IT Officers
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...