×

மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் 3 விடுதிகளுக்கு பரிசு வழங்க நிர்வாக ஒப்புதல் செய்து ஆணை

சென்னை: மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் மூன்று விடுதிகளை தேர்வு செய்து பரிசு வழங்க நிர்வாக ஒப்புதல் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை: 2021-22ம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், ‘மாநிலம் முழுவதும் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகள் சிறப்பாக செயல்படுவதை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் சிறந்த 3 விடுதிகளை தேர்வு செய்து 7 லட்சத்து 80 ஆயிரம் செலவில் பரிசுகள் வழங்கப்படும்’ என அறிவிப்பினை வெளியிட்டார்.

மாநிலம் முழுவதும் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர், சிறுபான்மையினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் சிறப்பாக செயல்படுவதை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் 3 சிறந்த விடுதிகளை தேர்வு செய்து நினைவுப்பரிசுகள் வழங்கிட அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். விடுதிகளை நன்கு நிர்வகிக்கும் காப்பாளர்/காப்பாளினிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பரிசுத்தொகைகள் வழங்கிடலாம் என பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனர் தெரிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட அளவில் ஆண்டுதோறும் சிறந்த 3 விடுதிகளை தேர்வு செய்து நினைவுப்பரிசு வழங்க ஏற்படும் செலவினம் 2,000. சிறந்த விடுதிகளை நிர்வகிக்கும் காப்பாளர், காப்பாளினிகளுக்கு முதல் இடம்பெறும் விடுதிக்கு 10 ஆயிரம், இரண்டாம் இடம்பெறும் விடுதிக்கு 5 ஆயிரம், மூன்றாம் இடம்பெறும் விடுதிக்கு 3 ஆயிரம் என மொத்தம் 18 ஆயிரம் வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் மூன்று விடுதிகளை தேர்வு செய்து 7,80,000 செலவில் பரிசுகள் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு ஆணையிடுகிறது. சிறப்பாக செயல்படும் விடுதிகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் நிதி ஒப்பளிப்பு கோரி கருத்துருவினை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனர் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...