×

குடோனில் பதுக்கி ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்: 5 பேர் கைது

ஆவடி: சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் குடோனில் பதுக்கி வைத்து ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தி விற்பனை செய்யவிருந்த 25 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை கடத்தி வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்வதாக அம்பத்தூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன.

இதனையடுத்து, போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜான்சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இதில், சென்னையை அடுத்த செங்குன்றம், வடகரை பகுதியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு கடத்தல் நடைபெறுவது தெரியவந்தது. இதனையடுத்து, நேற்று முன்தினம் இப்பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு குடோனில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அதிலிருந்த 50 கிலோ எடை கொண்ட 500 மூட்டையில் இருந்த 25 டன் எடை உள்ள அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், குடோனில் இருந்த 5 பேரை பிடித்து அம்பத்தூரில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் செங்குன்றம், எல்லையம்மன் பேட்டை, விநாயகர் கோவில் தெருவைச் சார்ந்த சண்முகம் (49), கும்மிடிபூண்டி, தேர்வாய் கண்டிகை, வாசுகி தெருவை சேர்ந்த சிவக்குமார் (39), புழல், தண்டல் காலனி, என்.எஸ்.சி போஸ் தெருவைச் சார்ந்த ரூபேஷ்குமார் (20), புழல், காவாங்கரை, எஸ்.எல்.ஆர் கேம்ப் பகுதியைச் சார்ந்த ராகுல் (20), சனுஜன் (21) ஆகியோர் என தெரியவந்தது. விசாரணையில், இவர்கள் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் துணையுடன் அரிசியை விலைக்கு வாங்கி, அதனை ரைஸ் மில்களில் பாலிஷ் செய்து ஆந்திர மாநிலத்திற்கு லாரியில் கடத்தி விற்பனை செய்ய இருப்பது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவர்களை திருவள்ளூர் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், போலீசார் குடோன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Tags : Andhra Pradesh , 5 arrested for trying to smuggle 25 tonnes of ration rice to Andhra Pradesh
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி