×

டேவிஸ் கோப்பை அரையிறுதியில் செர்பியா

மாட்ரிட்:  டேவிஸ் கோப்பை டென்னிஸ் காலிறுதியில் கஜகிஸ்தானை வீழ்த்திய செர்பிய அணி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. டேவிஸ் கோப்பை ஆடவர் குழு டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் ஸ்பெயினின் மாட்ரிட், இத்தாலியின் டுரின், ஆஸ்திரியாவின் இன்ஸ்புருக் நகரங்களில் நடக்கிறது. மாட்ரிட்டில் நேற்று நடந்த 2வது காலிறுதி ஆட்டங்களில் செர்பியா-கஜகிஸ்தான் அணிகள் மோதின. முதல் ஒற்றையர் பிரிவில் கஜகிஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கின் 7-6(7-5), 4-6, 7-6(13-11)என்ற செட்களில் செர்பியாவின் மியோமின் கெமனோவிச்சை போராடி வீழத்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலகின் நெம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என நேர் செட்களில் கஜகிஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்கை சாய்த்தார். தொடர்ந்து இரட்டையர் பிரிவில் செர்பியாவின் நிகோலா காக்ச், நோவக் ஜோகோவிச் இணை  6-2, 2-6, 6-3 என்ற செட்களில் கஜகிஸ்தானின் ஆந்த்ரே கெருபெவ், அலெக்சாண்டர் நெடோவ்யேசோவ் இணையை வீழ்த்தியது. அதனால் காலிறுதியில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற செர்பியா அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் மற்றொரு காலிறுதியில் குரேஷியா அணி 2-1 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் குரோஷியா-செர்பியா அணிகள் மோத உள்ளன.


Tags : Serbia ,Davis Cup , Serbia in the Davis Cup semifinals
× RELATED நடிகர் கமல்ஹாசனின் செர்பியா பயணம் ரத்து