பொங்கலுக்கு தேவையான பொருட்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்; அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் வருகின்ற தைப்பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2,15,48,060 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் உள்ள 20 பொருட்களோடு கரும்பும் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகள் தங்களிடம் கரும்பை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். பருவமழை, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்தால் ஓரளவுக்கு விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து மீள்வார்கள். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். குறிப்பாக மாநில அளவில், மாவட்ட அளவில் விவசாயிகள் கொண்ட குழுவை அமைத்து அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் கிடைக்கும் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தனிக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: