×

விராலிமலை அருகே 15 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய கொடும்பாளூர் பெரியகுளம்: கும்மியடித்து, மலர்தூவி பொதுமக்கள் வரவேற்பு

விராலிமலை: விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பெரியகுளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிரம்பியதை வரவேற்கும் விதமாக அப்பகுதிமக்கள் கும்மி அடித்தும், பட்டாசுகள் வெடித்தும், மலர் தூவி வரவேற்றனர்.தமிழகத்தில் கடந்த அக்டோபர் 26ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையானது தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கியது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விராலிமலையில் 55 சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் மழை பொழிவாகும். தற்போது வரை அவ்வப்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் சுற்றுப்பகுதி நீர்நிலைகள் மளமளவென்று நிரம்பி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கொடும்பாளூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொடும்பாளூர் பெரியகுளம் பதினைந்து வருடங்களுக்கு பிறகு நிரம்பியுள்ளது. இதனால் சுமார் 5 வருடங்களுக்கு நீர் பற்றாக்குறை இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீர் நிரம்பிய குளத்திலிருந்து கலிங்கி வெளியேறும் நீரை வரவேற்க ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்று திரண்டு மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். பின்பு அந்த உற்சாகத்தை கொண்டாட பெண்கள் பாட்டு பாடி கும்மி அடித்து குலவையிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இளைஞர்கள் விசில் அடித்து, வெடி வெடித்து கொண்டாடினர்.

Tags : Kodumbaloor Periyakulam ,Viralimalai ,Gummiyadittu ,Malarthuvi , Kodumbaloor Periyakulam filled up after 15 years near Viralimalai: Gummy and flower welcome public
× RELATED விராலிமலை ஊராட்சிக்கு இறந்தவர்களின்...