அதிமுக, இரட்டை இலைக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் மனு

புதுடெல்லி: அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று, அதிமுக தொடர்பான மனுவை அளித்தார். பின்னர், ‘கடந்த 2017ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சியையும் மதுசூதனன் தலைமைக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தற்போது அவர் உயிருடன் இல்லை. ஆனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அதிகாரத்தை பயன்படுத்தி, சட்ட விரோதமாக அதிமுக.வின் சட்ட விதிகளில் மாற்றம் செய்துள்ளனர். சட்டத்தை  திருத்தும் தகுதி எம்ஜிஆருடன் முடிந்து விட்டது.

அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் தீர்ப்புதான் கட்சியின் அனைத்தையும் முடிவு செய்யும். தமிழக தேர்தலின்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் விருப்ப மனுவை பெற்று, அதற்கு தலா ரூ.15 ஆயிரம் வசூலித்து, ரூ20 கோடிக்கும் மேல் ஓபிஎஸ்.சும், இபிஎஸ்.சும் ஊழல் செய்துள்ளனர். நேர்காணல் நடத்தாமல் அவர்களே நேரடியாக வேட்பாளர்களை நியமித்து விட்டார்கள். இவர்கள் 2 பேரும் கட்சி உறுப்பினர்களை காரணம் கூறாமல் நீக்குகின்றனர்.

உதாரணமாக, அன்வர் ராஜா நீக்கத்தை கூறலாம். மலேசியாவில் இருந்து வந்த பெண்ணை முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் சீரழித்தார். அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டும், இதுவரை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தலைமை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்று, புதிய நிர்வாகிகளை நியமிக்கும் வரையில் அவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்

புகழேந்தி மேலும் கூறுகையில், ‘‘சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், ரூ5 ஆயிரம் கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. ஆனால், அவர் அதற்கு மேலும் கொள்ளை அடித்துள்ளார். தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த முறைகேடுகளை கண்டறிந்து எடப்பாடி பழனிசாமி மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்,’’ என்றார்.

Related Stories:

More