×

சரவணா சூப்பர் ஸ்டோர்சில் வருமான வரித்துறை ரெய்டு: தமிழகம் முழுவதும் 12 இடங்களில் நடந்தது

சென்னை: தமிழகத்தில் பிரபலமான சரவணா சூப்பர் ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடை மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய்க்கு வரி முறைகேடு செய்திருப்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை தி.நகரை மையமாக வைத்து நகரின் பல இடங்களில் பிரபலமான சரவணா சூப்பர் ஸ்டோர்ஸ் ஜவுளிக் குழுமம் கடைகளை நடத்தி வருகிறது. இந்த குழுமத்திற்கு தி.நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டையில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் உள்ளன. தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு ஜவுளிக் குழுமத்துக்குச் சொந்தமான அலுவலகம், கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.

இந்த நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் முறையாக வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாததால், இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை நடந்த நேரத்தில் கடைக்கு வந்த ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் பொதுமக்கள் யாரும் கடைகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சோதனையில் வருமான வரி ஏய்ப்பு குறித்த ஆவணங்கள், பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல, மதுரை, பைகாராவில் உள்ள சரவணா ஜவுளி, நகைக் கடைக்குள் நேற்று காலை 8 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 20 பேர் வந்தனர்.

கடைகளின் கதவுகளை மூடி தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரை இச்சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடையில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடந்தது. 5 காரில் வந்த 25க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 12 இடங்களில் சோதனை நடந்தது. ஜிஎஸ்டி முறைகேடு தொடர்பாக இந்த சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தியதாகவும், மேலும் பல கோடிக்கு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Saravana Super Stores ,Tamil Nadu , Income Tax Raid at Saravana Super Stores: 12 places across Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...