நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தல் அலுவலர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமை வகித்தார். அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 9.12.2021 அன்று வெளியிடப்பட உள்ளது. வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளர்கருக்கு சாய்தள நடைமேடை அமைத்தல் மற்றும் முதியோர்களுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்தல் குறித்து பேசப்பட்டது.

மேலும், கோவிட் தடுப்பு மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திலிருந்து பெறுதல், விநியோகம் செய்தல் குறித்த பணிகள் மேற்கொள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் மற்றும் கோவிட் - 19 தடுப்பு மருந்துகளை இருப்பு வைக்க கிடங்கு வசதிக்கு இடம் தேர்வு செய்தல், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணுகை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி போடுவதை உறுதி செய்தல், பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரலையாக கண்காணித்தல் மற்றும் நுண் மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான கருத்துகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விசுமகாஜன், முதன்மை தேர்தல் அலுவலர்கள் (நகராட்சிகள்) தனலட்சுமி, (ஊராட்சிகள்) சுப்பிரமணியம், உதவி ஆணையர் (தேர்தல்) அகஸ்ரீ சம்பந் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: