சென்னை மாநகராட்சி தேர்தல் சத்தியமூர்த்தி பவனில் போட்டிப்போட்டு காங்கிரசார் விருப்ப மனு தாக்கல்: மாவட்ட தலைவர்களும் களத்தில் குதித்தனர்

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரசார் சத்தியமூர்த்தி பவனில் போட்டி போட்டு விருப்பமனு தாக்கல் செய்தனர். மாவட்ட தலைவர்களும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வகையில் மனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ள காங்கிரசாரிடம் இருந்து டிச. 1ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், காங்கிரஸ் அலுவலகமாக சத்தியமூர்த்தி பவனிலும், பிற மாவட்ட காங்கிரசார் அந்தந்த மாவட்ட அலுவலகத்திலும் விருப்ப மனுக்களை கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சத்தியமூர்த்திபவனில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட காங்கிரசார், மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் நேற்று விருப்ப மனுக்களை அளித்தனர். சென்னையில் உள்ள 7 மாவட்ட கமிட்டிகளுக்கும் தனித்தனி மேசைகள் அமைத்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.

இதையொட்டி கட்சி அலுவலகத்தில் ஏராளமான காங்கிரசார் குவிந்திருந்தனர். விருப்ப மனு அளிக்க வரும் காங்கிரசார், பட்டாசு வெடித்தும் கோஷங்கள் எழுப்பியபடியும் மனுக்களை கொடுத்தனர். குறிப்பாக மாவட்ட தலைவர்களும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வகையில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், அவரது மாவட்டத்திற்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் வகையில், செட்டி தோட்டம் சுகு என்பவர் விருப்ப மனு தாக்கல் செய்தார். அதேபோன்று மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், டில்லி பாபு, முத்தழகன், ரஞ்சன் குமார், அடையார் துரை ஆகியோரும் தங்கள் மாவட்டத்துக்குட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் வகையில் அவரது ஆதரவாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்தனர். 163 வது வார்டில் போட்டியிடும் வகையில் மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

அதேபோன்று மாவட்ட பொறுப்பாளர்கள் கொட்டிவாக்கம் முருகன் 181வது வார்டுக்கும், சுமதி அன்பரசு 122, 123 வது வார்டுகளுக்கும், தகவல் அறியும் உரிமை பிரிவு துணை தலைவர் மயிலை தரணி 121, 124வது வார்டுகளுக்கும், 178வது வார்டுக்கு திருவான்மியூர் மனோகரனும், 63வது வார்டுக்கு எஸ்.கே.நவாஸ், 180வது வார்டுக்கு மகிளா காங்கிரஸ் துணை தலைவி பா.தேன்மொழி தளபதி பாஸ்கரும், 143வது வார்டுக்கு முன்னாள் கவுன்சிலர் தமிழ் செல்வனும், 63வது வார்டுக்கு முன்னாள் கவுன்சிலர் நாகராஜனும், அண்ணாநகர் பகுதியில் முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். நேற்று ஒரு நாள் மட்டுமே விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்ததால் நேற்று ஏராளமான காங்கிரசார் போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கான விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைவர்களிடம் உரிய கட்டணத்தை செலுத்தி ஒப்படைத்தனர்.

Related Stories: